Published : 30 Oct 2020 03:14 AM
Last Updated : 30 Oct 2020 03:14 AM
தமிழகத்தில் வழக்கமாக வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடக்கத்தில் தொடங்கும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால், விவசாயிகள் வேதனை அடைந்தனர். குறிப்பாகதூத்துக்குடி மாவட்ட மானாவாரிவிவசாயிகள் மிகுந்த கவலையடைந்தனர். மாவட்டத்தில் மானாவாரி விவசாயிகள் வழக்கமாக வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு 10 நாட்களுக்கு முன்பே உளுந்து, பாசி, மக்காச்சோளம் விதைப்பு செய்துவிடுவார்கள். மழை தொடங்கியதும் பயிர்கள் முளைத்து வளரத் தொடங்கிவிடும்.
அவ்வாறு இந்த ஆண்டும்மானாவாரி விவசாயிகள் அக்டோபர் மாத தொடக்கத்திலேயே பல ஆயிரம் ஏக்கரில் மானாவாரி பயிர்களை விதைப்பு செய்தனர். சில பகுதிகளில் அவ்வப்போது பெய்த லேசான மழை காரணமாக பயிர்கள் முளைத்து வளரத் தொடங்கின. ஆனால், பருவமழை தாமதமானதால் முளைத்த பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
இந்நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளில் வடகிழக்கு பருவமழை வானிலை ஆய்வு மையம் அறிவித்தபடி நேற்றுமுன்தினம் தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டத்திலும் நேற்றுமுன்தினம் இரவு பருவமழை தொடங்கியது. குறிப்பாக வைப்பாறு, சூரங்குடி, காடல்குடி, விளாத்திகுளம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்) :
திருச்செந்தூர் 1, விளாத்திகுளம் 44, காடல்குடி 44, வைப்பாறு 102, சூரங்குடி106, கோவில்பட்டி17, கயத்தாறு 2, கடம்பூர் 19, ஓட்டப்பிடாரம் 10, மணியாச்சி 15, கீழஅரசரடி 6, எட்டயபுரம் 26, சாத்தான்குளம் 6, தூத்துக்குடியில் 12.5 மி.மீ., மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக சூரங்குடியில் 106 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT