Published : 17 Dec 2021 03:08 AM
Last Updated : 17 Dec 2021 03:08 AM
விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் விவசாய முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த அதிமுக ஆட்சியில் விவசாய கடன்கள் வழங்கப்பட்டதில் விதிமீறல் நடைபெற்றுள்ளதாகவும், விவசாயிகளுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களை திரும்பச் செலுத்த வேண்டும் என்றும், அப்படி செலுத்துபவர்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும் என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவித்துள்ளார். இதனால் நாமக்கல் மாவட்டத்தில் 23 ஆயிரம் விவசாயிகளும், சேலம் மாவட்டத்தில் 49 ஆயிரம் விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதைக்கண்டித்தும், கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்றுள்ள விவசாயிகளுக்கு அறிவித்தபடி கடனை தள்ளுபடி செய்யக்கோரியும், புதிய கடன் வழங்க வலியுறுத்தியும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் விவசாய முன்னேற்றக்கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க மாநில தலைவர் செல்ல. ராஜாமணி தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் கே.பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தார்.
கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. போராட்ட முடிவில், 15 நாட்களில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்து, புதிய கடன் வழங்காவிட்டால் ஜன.3-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும், என தீர்மானிக்கப்பட்டது.
முன்னதாக நாமக்கல்லில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்க வந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விவசாயிகளின் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார். நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT