Published : 17 Dec 2021 03:08 AM
Last Updated : 17 Dec 2021 03:08 AM
கள் தடை பற்றி கருத்து கேட்டு கட்சிகளுக்கு நெருக்கடி கொடுக்க முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி தெரிவித்தார்.
கரூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: பனை, தென்னை மரங்கள் இ ருக்கும் எந்தவொரு நாட்டிலும் கள் இறக்கவும், பருகவும் தடை இல்லை. ஆனால், தமிழகத்தில் மட்டும் 33 ஆண்டுகளாக கள் தடை தொடர்கிறது. கள் விடுதலை வேண்டி கடந்த 17 ஆண்டுகளாக தமிழ்நாடுகள் இயக்கம் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.
2022 ஜன.21 முதல் அரசியலமைப்புச் சட்டப்படி கள் இறக்கி விற்கும் அறப்போராட்டம் நடைபெறும். இதில், அரசியல் கட்சிகளுக்கு உடன்பாடு இருந்தால், இப்போராட்டத்தை ஆதரிக்க வேண்டும். உடன்பாடு இல்லையெனில், எங்களுடன் வாதிட்டு கள்ளும் ஒரு தடை செய்யப்படவேண்டிய போதைப் பொருள்தான் என நிரூபிக்க வேண்டும். இந்த இரண்டுக்கும் தயாராக இல்லை என்றால், கட்சியும் தலைவர் பதவியும் எதற்கு என்ற கேள்விக்கு கட்சிகளின் தலைமை பதில் சொல்ல வேண்டும்.
கள் தடை விவகாரத்தில் அரசியல் கட்சிகள் இதுவரை காட்டி வந்த நழுவல் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். அவற்றிடம் கள் தடை குறித்து கருத்து கேட்டு நெருக்கடி கொடுக்கப்படும். ஆளுங்கட்சியும் இதற்கு விதிவிலக்கல்ல என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT