Published : 15 Dec 2021 03:09 AM
Last Updated : 15 Dec 2021 03:09 AM
பஞ்சப்பூரிலிருந்து பிராட்டியூர், முத்தரசநல்லூர், மாடக்குடி, பூவாளூர் வழியாக அசூர் வரை புதிய அரைவட்டச் சுற்றுச்சாலை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.3.57 கோடி ஒதுக்கி அரசு உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாநகரில் விபத்துகளை குறைக்கவும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும் முக்கிய மான வழித்தடங்களில் உயர்நிலை பாலங்கள், சுற்றுச்சாலைகள் அமைக்கப்படும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவித்திருந்தார்.
இதையடுத்து மாநகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் தொடர்பாக மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கள் ஆய்வு செய்து, அரசுக்கு கருத்துரு அனுப்பினர். அவற்றை செயல்பாட்டுக்குக் கொண்டு வருவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோரிடம் கே.என்.நேரு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்பேரில் இத்திட்டங்கள் தொடர்பாக அரசு பரிசீலனை செய்து வந்தது.
இந்நிலையில் திருச்சியில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைய உள்ள பஞ்சப்பூரிலிருந்து திருச்சி - திண்டுக்கல் சாலை, திருச்சி - வயலூர் சாலை, திருச்சி - கரூர் பைபாஸ் சாலை, திருச்சி - நாமக்கல் சாலை, திருச்சி - மண்ணச்சநல்லூர் சாலை, திருச்சி - சென்னை சாலை, திருச்சி - சிதம்பரம் சாலை, திருச்சி - தஞ்சை சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் புதிய அரைவட்டச் சுற்றுசாலை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.3.57 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, அவர்கள் கூறியதாவது:
திருச்சி மாநகரின் நெரிசலைக் குறைப்பதற்காக தேசிய நெடுஞ் சாலைத்துறை சார்பில் அசூர், மாத்தூர் வழியாக பஞ்சப்பூர் வரையிலான சுற்றுச்சாலை பணிகள் ஏறக்குறைய முடிந்துவிட்டன.
பஞ்சப்பூரிலிருந்து சோழன் நகர், ஜீயபுரம் வரையிலான மீதமுள்ள பணிகள் நீண்ட காலமாக இழுபறியில் இருந்து வருகிறது. இதனால் மாநக ருக்குள் போக்குவரத்து நெரிசல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
இதைத்தவிர்க்க பஞ்சப்பூரிலி ருந்து பிராட்டியூர், முத்தரசநல்லூர், மாடக்குடி, பூவாளூர், கிளிக்கூடு, அசூர் வரை புதிய அரைவட்ட சுற்றுச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சில இடங்களில் ஏற்கெனவே உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை பயன்படுத்திக் கொள்ள திட்ட மிடப்பட்டுள்ளது.
இதன்படி பஞ்சப்பூரில் ஒருங்கி ணைந்த பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்திலிருந்து தொடங்கி இரட்டைமலை, பிராட்டியூர் வழியாக குடமுருட்டி சோதனைச் சாவடி வரை 11.6 கி.மீ தொலைவுக்கு புதிதாக வழித்தடம் உருவாக்கப்பட உள்ளது. அங்கிருந்து கம்பரசம்பேட்டை வழியாக முத்தரசநல்லூர் வரை தற்போதுள்ள தேசிய நெடுஞ் சாலையில் பயணிக்கலாம்.
பின்னர், முத்தரசநல்லூரில் இருந்து காவிரி ஆற்றைக் கடந்து மேலூர் (வண்ணத்துப்பூச்சி பூங்கா அருகே), கொள்ளிடம் ஆறு, நாமக்கல் சாலை, மண்ணச்சநல்லூர் சாலை ஆகியவற்றைக் கடந்து மாடக்குடி வரை 10.2 கி.மீ தொலைவுக்கு புதிய சாலை அமைக்கப்படும். பின்னர் அங்கிருந்து திருச்சி - சிதம்பரம் சாலையில் பூவாளூர் வரை தற்போதுள்ள சாலையில் பயணிக்கலாம். அதன்பின் பூவாளூரில் இருந்து கிளிக்கூடு, அசூர் வரை 22.6 கி.மீ தொலை வுக்கு புதிதாக வழித்தடம் உருவாக் கப்பட உள்ளது.
இத்தடத்தில் எந்தெந்த கிராமங் கள் வழியாக சாலை அமைப்பது, எத்தனை இடங்களில் மேம்பாலம் அமைப்பது, கையகப்படுத்த வேண்டிய நிலத்தின் அளவு மற்றும் மதிப்பை கணக்கிடுவது உள்ளிட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் 6 மாத காலத் துக்குள் நிறைவுபெறும். அதன்பின் அரசிடமிருந்து திட்டத்துக்கான நிதியைப் பெற்று சாலைப் பணிகள் தொடங்கப்படும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT