Published : 13 Dec 2021 03:09 AM
Last Updated : 13 Dec 2021 03:09 AM
நகர்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாக மழையால் சேதமடைந்த சாலை களை சீரமைக்க வேண்டும் என நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார்.
வேலூர் மாவட்டம் மாநகராட்சி 4-வது மண்டலத்துக்கு உட்பட்ட கஸ்பா பிள்ளையார் கோயில் தெருவில் வேலூர் சட்டப் பேரவை உறுப்பினர் நிதி திட்டம் மற்றும் பொது நிதி திட்டத்தின் கீழ் ரூ.108 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சமுதாய கூடம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பேசும்போது, ‘‘இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பல்வேறு வசதிகளுடன் கூடிய சமுதாய கூடம் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப் பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக மேம்படுத்தப்படாத பணிகளை தமிழக அரசு விரைவாக முன்னெடுத்து செல்லும். வேலூர் மாவட்டத்தின் அடையாள சின்னமாக கோட்டை விளங்கி வருவதால் அதை சீர் செய்யும் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பில் அழுத்தம் கொடுத்து, வேலூர் கோட்டை சிறந்த கோட்டையாக சீர்திருத்தும் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும்.
வேலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பல சாலைகள் சேத மடைந்துள்ளன. இச்சாலைகளை சீரமைக்க வேண்டும் என ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தேன். எனவே, சேதமடைந்த சாலைகளை விரைவாக சீர்செய்ய வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாக சாலைகளை சீரமைக்க வேண்டும்.
வேலூரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கிரீன் சர்க்கிள் பகுதியில் எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் அங்குள்ள ஆக்கிர மிப்புகளை மாவட்ட நிர்வாகம் அகற்ற வேண்டும்’’என்றார்.
இதைத்தொடர்ந்து, காட்பாடி, விருதம்பட்டு பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பயணியர் நிழற்குடை கட்டிடத்தை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார். பின்னர், காட்பாடி அடுத்த கீரைச்சாத்து ஊராட்சிக்கு உட்பட்ட ஜி.ஆர்.குப்பம் பகுதியில் அரசு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 36 பயனாளிகளுக்கு ரூ.2.70 லட்சம் மதிப்பில் வீடு கட்டுவதற்கான ஆணையை நீர்வளத்துறை அமைச் சர் துரைமுருகன் வழங்கினார்.
அப்போது, அவர் பேசும்போது, ‘‘தமிழகத்துக்கு நான் அமைச்சர். காட்பாடி தொகுதிக்கு நான் எம்எல்ஏ., என்பதால் தொகுதி மக்கள் ஒவ்வொரு ஊராட்சியிலும் என்னென்ன பிரச்சினை உள்ளது என்பதை என்னிடம் தெரிவிக்கலாம்.
தொகுதி பிரச்சினைகளை தெரிவித்தால் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதற்கான முழு தொகையை பயனாளிகளுக்கு அதிகாரிகள் வழங்க வேண்டும். பயனாளிகளிடம் கையூட்டு பெறுவது, இத்திட்டத்தில் முறைகேடு செய்வது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது அதிகபட்ச நடவடிக்கையை எடுப்பேன்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள கிராமப்பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு நடத்த வேண்டும். கிராமப்புற மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் சென்று சேருகிறதா? கிராம மக்களுக்கு தேவையான திட்டங்கள் என்ன என்பதை அறிந்து என்னிடம் தெரிவித்தால் அதற்கான ஏற்பாடுகள் செய்வதுடன் அதற்கான நிதியும் பெற்றுத் தருவேன்’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில், கைத் தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி, மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார் (அணைக்கட்டு), கார்த்திகேயன் (வேலூர்), மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT