Published : 12 Dec 2021 03:11 AM
Last Updated : 12 Dec 2021 03:11 AM
திருநெல்வேலி/ தென்காசி/ தூத்துக்குடி
திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி யம்மன் கோயிலில் மார்கழி திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. காலை 7 மணிக்கு கொடியேற்ற மும், அதைத் தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. திரளாக பக்தர்கள் பங்கேற்றனர்.
இத் திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. வரும் 19-ம் தேதி வரை அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, காலை 5 மணிக்கு பெரிய சபாபதிமுன் மாணிக்கவாசகரை எழுந்தருளச் செய்து, திருவெம்பாவை பாடல்கள் பாடப்பெற்று நடன தீபாராதனை நடைபெறுகிறது.
20-ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு திருஞானசம்பந்தரால் பாடப் பெற்ற தலமாகிய பஞ்சசபைகளில் தனித்துவ மிக்க இத்திருக்கோயில் தாமிரசபையில் பசு தீபாராதனையும், 4 மணிக்கு நடராஜர் திருநடன வைபவமும் நடைபெறுகிறது.
ராஜவல்லிபுரம்
சங்கரன்கோவில்
நடராஜர் திருத்தாண்டவம் ஆடிய ஐந்து சபைகளில் ஒன்றான சித்திரசபை அமைந்துள்ள குற்றாலத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் மார்கழி திருவாதிரை திருவிழா பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டுக்கான திருவாதிரை திருவிழா நேற்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.குற்றாலநாதர் சந்நிதியில் உள்ள கொடிமரத்தில் 16 வகை மூலிகை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க பஞ்ச வாத்தியங்களுடன் கொடி ஏற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 15-ம் தேதி நடைபெறுகிறது. 18-ம் தேதி பஞ்ச சபைகளில் ஒன்றான சித்திரசபையில் தாண்டவ தீபாராதனையும், 20-ம் தேதி திரிகூட மண்டபத்தில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும் நடைபெறுகிறது. தினமும் காலை, இரவில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.
இதேபோல, சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. சங்கரலிங்க சுவாமி சந்நிதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு, சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். 10 நாள் விழாவில் தினமும் சுவாமி, அம்பாள் உலா கோயில் பிரகாரத்தில் நடைபெறுகிறது. வரும் 20-ம் தேதி திருவாதிரை திருவிழா நடைபெறுகிறது.
செய்துங்கநல்லூர்
செய்துங்கநல்லூர் சிவகாமி அம்பாள் சமேத பதஞ்சலி வியாக்ரபாதீஸ்வரர் கோயிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவ ஸ்தலங்களில் ஒன்றான இக்கோயிலில் ஆண்டுதோறும் திருவாதிரை திருவிழா 10 நாட்கள் நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக கரோனா பரவலால் இத்திருவிழா நடைபெறவில்லை. நடப்பாண்டு இக்கோயிலில் திருவாதிரை திருவிழா நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதையொட்டி நேற்று முன்தினம் காலை 7.30 மணிக்கு மேல் கணபதி ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனையும், மாலை 5 மணிக்கு கொடி பிரதட்சணமும் நடைபெற்றது. தொடர்ந்து கொடி பட்டம் ஊர்வலம் நடந்தது.
நேற்று காலை 7.30 மணிக்கு முதல் நாள் யாகசாலை பூஜை தொடங்கியது. தொடர்ந்து, விக்னேஷ்வர பூஜை, கொடிமரம், சுவாமி, சிவகாமி அம்மன், நடராஜர், நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது. பெருங்குளம் ஆதினம் ல சிவப்பிரகாச ஞானதேசிக சுவாமிகள் முன்னிலையில் கோயில் முன்புள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவிழா நடைபெறும் 10 நாட்களும் காலையும் மாலையும் யாகசாலை பூஜை நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து சுவாமி திருவீதி உலா எழுந்தருளும் நிகழ்ச்சியும், திருநடன தீபாராதனையும் நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment