Published : 10 Dec 2021 03:08 AM
Last Updated : 10 Dec 2021 03:08 AM
உலகை இந்தியா வழி நடத்த தேசிய கல்விக் கொள்கை உதவும் என பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 37-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்குத் தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:
நாட்டின் சுதந்திரத்துக்காக எண்ணிலடங்காதோர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆங்கிலேய ஆட்சியாளர்களால் அவர்கள் சந்தித்த இன்னல்கள், கொடுமைகள் எண்ணிலடங்காதவை. பலர் கொலை செய்யப்பட்டனர். அவர்களில் பலர் தற்போது வரையிலும்கூட அடையாளம் காணப்படவில்லை என்பது துரதிஷ்டவசமானது. பாரதிதாசன் பல்கலைக்கழகம் இதுகுறித்த ஓர் ஆய்வை நடத்தி, நம் நாட்டுக்கு அவர்களது பங்களிப்பின் விவரங்களை அழியாத வகையில் பதிவு செய்ய வேண்டும்.
பாரதிதாசன் பல்கலைக்கழகம் 80-க்கும் அதிகமான மையங்கள் மற்றும் 160-க்கும் அதிகமான இணைப்புக் கல்லூரிகள் மூலம் தமிழகத்தின் உயர் கல்வித் தேவைகளை நிறைவு செய்கிறது. இதன்மூலம் ஆண்டுதோறும் ஏறத்தாழ 2.80 லட்சம் மாணவர்கள் பல்வேறு கற்றல் திட்டங்களைத் தொடர்கின்றனர்.
புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்ற பாரதியார் மற்றும் பாரதிதாசன் ஆகியோரது கனவை நனவாக்கும் வகையில் தேசிய கல்விக் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இது, உலகை இந்தியா வழிநடத்த உதவும். இந்தியாவை சமத்துவமான மற்றும் துடிப்பான அறிவுசார் சமூகமாக மாற்றுவதற்கு உதவும்.
தற்போதைய கல்வி அமைப்பில் உள்ள தடைகளை அகற்ற தேசிய கல்விக் கொள்கை உதவும். இதில், கற்றல் முடிவுகளை எடுத்தல், துறைகளைப் பிரித்தல், வரையறுக்கப்பட்ட அணுகுமுறை, குறிப்பாக சமூக, பொருளாதாரரீதியாக பின்தங்கிய பகுதிகளில் ஆசிரியர் மற்றும் நிறுவன சுயாட்சிக்கு கவனம் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
தேசிய கல்விக் கொள்கையில் கல்வியை நவீனமயமாக்க பிரதமரால் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், ஸ்வச் பாரத், சம்ருத்த பாரத், ஆத்ம நிர்பார் பாரத், ஜல் ஜீவன் மிஷன், ஜன்தன் யோஜனா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான மற்ற முயற்சிகளாகும் என்றார்.
பொன்முடி வேண்டுகோள்
நிகழ்ச்சியில், டெல்லி இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவர் (பொறுப்பு) ப.கனகசபாபதி, உயர் கல்வித் துறைச் செயலர் டி.கார்த்திகேயன் மற்றும் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம.செல்வம் வரவேற்றார். பல்கலைக்கழகப் பதிவாளர் க.கோபிநாத் நன்றி கூறினார்.
பட்டம் பெறும் 1,06,231 பேரில் நேற்று நடைபெற்ற விழாவில் 2,224 பேருக்கு நேரில் பட்டங்கள் வழங்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT