Published : 10 Dec 2021 03:08 AM
Last Updated : 10 Dec 2021 03:08 AM
பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் பல்சமய நல்லிணக்க கிறிஸ்து பிறப்பு விழா நாளை நடைபெறுகிறது.
இதுகுறித்து, பாளையங் கோட்டை மறைமாவட்ட பல்சமய உரையாடல் பணிக்குழு செயலாளர் அருள்தந்தை மை.பா.ஜேசுராஜ் கூறியதாவது:
`மனிதமே புனிதம்’ என்ற கருத்தில் இந்த விழா கொண்டாடப் படுகிறது. பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் நாளை பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இந்த விழாவுக்கு பாளையங்கோட்டை கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் ச.அந்தோனிசாமி, மத் பரசமய கோளரிநாத ஆதீனம் ல புத்தாத்மாநந்தா சரஸ்வதி சுவாமிகள், தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் பி.ஏ. காஜா முயீனுத்தீன், தென்னிந்திய திருச்சபை பேராயர் பர்னபாஸ் ஆகியோர் தலைமை வகிக்கிறார்கள்.
தமிழக சட்டப் பேரவை தலைவர் மு. அப்பாவு சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். ஞானதிரவியம் எம்.பி., அப்துல்வகாப் எம்.எல்.ஏ., ஆட்சியர் வே. விஷ்ணு, மாநகராட்சி ஆணையர் பா. விஷ்ணு சந்திரன், மாநகர காவல் ஆணையர் செந்தாமரைகண்ணன், துணை ஆணையர் டி.பி. சுரேஷ்குமார், திருநெல்வேலி பிரம்மகுமாரிகள் இயக்க நிர்வாகி புவனேஸ்வரி, ராமநாதபுரம் பிரஹ்போதி புத்த விஹார் தலைமை துறவி மவுரியா புத்தா பங்கேற்கிறார்கள்.
விழாவையொட்டி ஏழை, எளியோருக்கு நலஉதவிகள் வழங்கப்படுகின்றன. அத்துடன் சிறப்பான சேவைக்காக மாவட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தலைவர் ஜெ. முகமதுஅலி, டாக்டர் எஸ். பிரேமச்சந்திரன், மெல்லிசை கலைஞர்கள் சங்க மாநில துணைத் தலைவர் ஜி.எஸ். அபுபக்கர், குறிச்சி லாரன்ஸ் முதியோர் இல்ல இயக்குநர் ஜெ. இருதயம் பெர்னாண்டஸ், கரோனா பேரிடர் மீட்பு தன்னார்வலர்கள் அறக்கட்டளை நிர்வாகிகள், திருநெல்வேலி புனித அன்னாள் அறிவுத்திறன் குன்றியோருக்கான மறுவாழ்வு சிறப்பு பள்ளி நிர்வாகிகளுக்கு சேவை செம்மல் விருது வழங்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT