Published : 10 Dec 2021 03:09 AM
Last Updated : 10 Dec 2021 03:09 AM
வேலூர்/ராணிப்பேட்டை/திருப்பத்தூர்
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்காக புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டனர்.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் முடிந்த நிலையில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வதற்கான வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி, வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் என நகர்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் வேலூர் மாநகராட்சி மற்றும் குடியாத்தம், பேரணாம்பட்டு நகராட்சிகள் மற்றும் பென்னாத்தூர், ஒடுக்கத்தூர், பள்ளிகொண்டா, திருவலம் பேரூராட்சிகளில் மொத்தம் 5 லட்சத்து 85 ஆயிரத்து 855 பேர் அடங்கிய வாக்காளர் பட்டியலை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டார்.
இதில், குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன், அதிமுக மாநகர மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு மனுத்தாக்கல் செய்யப்படும் இறுதி நாள் வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர்பான விவரங்கள் வருவாய்த் துறையினரிடம் இருந்து பெறப்பட்டு மாற்றங்கள் செய்யப்படும் என்றும் தேர்தல் வாக்குப்பதிவு பணியில் சுமார் 3,100 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாநகராட்சியில் மட்டும் 1 லட்சத்து 97 ஆயிரத்து 315 ஆண்கள், 2 லட்சத்து 12 ஆயிரத்து 610 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 42 பேர் என மொத்தம் 4 லட்சத்து 9 ஆயிரத்து 967 பேர் உள்ளனர். குடியாத்தம், பேரணாம்பட்டு நகராட்சிகளில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 404 வாக்காளர்கள், பேரூராட்சிகளில் 44 ஆயிரத்து 484 வாக்காளர்கள் உள்ளனர்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாலாஜா, ராணிப்பேட்டை, அரக்கோணம், ஆற்காடு, மேல்விஷாரம் நகராட்சிகள் மற்றும் அம்மூர், கலவை, காவேரிப்பாக்கம், நெமிலி, பனப்பாக்கம், தக்கோலம், திமிரி, விளாப்பாக்கம் பேரூராட்சிகள் என மொத்தம் 3 லட்சத்து ஓராயிரத்து 753 பேர் அடங்கிய வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டார்.இதில், மாவட்ட வருவாய் அலுவலர் முஹம்மது அஸ்லம், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) மரியம் ரெஜினா உள்ளிட்டோர் உடனிருந்தனர். மாவட்டத்தில் 5 நகராட்சிகளில் மொத்தம் 2 லட்சத்து 21 ஆயிரத்து 912 வாக்காளர்கள், 8 பேரூராட்சிகளில் 79 ஆயிரத்து 841 வாக்காளர்கள் உள்ளனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில், புகைப் படத்துடன் கூடிய திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா நேற்று வெளியிட்டார்.அப்போது, அவர் பேசும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் என 4 நகராட்சிகள் உள்ளன. இந்த 4 நகராட்சிகளில் உள்ள 126 வார்டு களுக்கு 299 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.
அதேபோல, உதயேந்திரம், நாட்றாம்பள்ளி, ஆலங்காயம் என 3 பேரூராட்சிகள் உள்ளன. இந்த3 பேரூராட்சிகளில் 45 வார்டுகள் உள்ளன. இதற்காக 48 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. மாவட்டம் முழுவதும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி 171 வார்டுகளுக்கு மொத்தம் 347 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இந்த வார்டு வாரியாக நிறைவு செய்யப்பட்ட திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் படி தற்போது 3 லட்சத்து 5 ஆயிரத்து 340 வாக்காளர்கள் உள்ளனர்.
புகைப்படத்துடன் வெளியிடப் பட்டுள்ள திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், ஆட்சியர் அலுவலகம்,சார் ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள் ளன. எனவே, பொதுமக்கள் தங்களது பெயர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை சரி பார்த்துக்கொள்ளலாம்’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் செல்வராசு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) வில்சன்ராஜசேகர், ஹரிஹரன் (வளர்ச்சி), நகராட்சி ஆணை யாளர்கள் பழனி, ஜெயராமராஜா, ஸ்டாலின்பாபு, ஷகீலா, செயல் அலுவலர்கள் கணேசன், நந்த குமார், குருசாமி மற்றும் திமுக, அதிமுக, பாமக, தேமுதிக, பாஜக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வேலூர் மாநகராட்சி விவரம்:வரிசை எண்உள்ளாட்சி அமைப்புமொத்த வார்டுஆண்பெண்3-ம் பாலினம்மொத்தம்01வேலூர்601,97,3152,12,610424,09,967
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment