Published : 10 Dec 2021 03:09 AM
Last Updated : 10 Dec 2021 03:09 AM
முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் மறைவுக்கு இந்து அமைப்புகள் மற்றும் பள்ளி மாணவர்கள் சார்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
குன்னூர் அருகே நேற்று முன் தினம் நடைபெற்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். அவர்களது மறைவுக்கு பாஜக, இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் மற்றும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் தி.மலை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
தி.மலை, சேத்துப்பட்டு, வந்தவாசி மற்றும் கண்ணமங்கலத்தில் உள்ளிட்ட பகுதிகளில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
முப்படை ராணுவ தளபதி உருவப் படத்துக்கு மலர் தூவி விஷ்வ இந்து பரிஷத், பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து முன்னணியினர் அஞ்சலி செலுத்தினர்.
மேலும், அவர்கள் அகல் விளக்கு ஏற்றி வைத்து சிரத்தாஞ்சலி செலுத்தினர். இதில், இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் திரளாக பங்கேற்றனர்.
இதேபோல், செங்கம் அடுத்த மேல்வணக்கம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, செங்கம் அடுத்த மேல் பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மற்றும் ஆரணி அடுத்த பையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முப்படை தலைமை தளபதி உட்பட 13 பேர் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
பிபின் ராவத் உருவப் படத்துக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும், 13 பேரின் ஆன்மா சாந்தியடைய மோட்ச தீபம் மற்றும் மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தப் பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT