Published : 09 Dec 2021 03:10 AM
Last Updated : 09 Dec 2021 03:10 AM
பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரி முதல்வர்களுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று கலந்துரையாடினார்.
திருச்சி மாவட்டத்தில் 2 நாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தனியார் விமானத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று காலை திருச்சி விமான நிலையம் வந்தார். அங்கு அவருக்கு மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, மாநகரக் காவல் ஆணையர் ஜி.கார்த்திகேயன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
தொடர்ந்து, அங்கிருந்து பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு காரில் புறப்பட்டுச் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவிவை, பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம.செல்வம், பதிவாளர் க.கோபிநாத் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பின்னர், அங்குள்ள நூலகத்தைப் பார்வையிட்ட ஆளுநர், புனரமைக்கப்பட்ட மூலிகைத் தோட்டத்தைத் திறந்து வைத்து, மரக்கன்றை நட்டுவைத்தார். தொடர்ந்து, பல்கலைக்கழக அறிவியல் மற்றும் கருவியாக்க மையம் உள்ளிட்ட மையங்களைப் பார்வையிட்டு துறை பேராசிரியர்களுடன் விவரங்களைக் கேட்டறிந்தார்.அதைத்தொடர்ந்து, பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரி முதல்வர்கள், பிரதிநிதிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோருடன் இரு நிகழ்வாக அவர் கலந்துரையாடினார்.
இன்று காலை(டிச.9) நடைபெறும் பல்கலைக்கழகத்தின் 37-வது பட்டமளிப்பு விழாவில் அவர் பங்கேற்கிறார். இந்த நிகழ்வில் பல்கலைக்கழக இணை வேந்தரும், உயர் கல்வித் துறை அமைச்சருமான க.பொன்முடி, டெல்லி இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கழகத்தின் (பொறுப்பு) தலைவர் ப.கனகசபாபதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT