Published : 09 Dec 2021 03:11 AM
Last Updated : 09 Dec 2021 03:11 AM
திருநெல்வேலியில் ஸ்மார்ட் சிட்டிதிட்டத்தில் மறுகட்டமைப்பு செய்யப்பட்ட வேய்ந்தான்குளம் மற்றும்பாளையங்கோட்டை பேருந்து நிலையங்கள் மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன. இவற்றுடன் சேர்த்து ரூ.110 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை சென்னையிலிருந்து காணொலி மூலம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
திருநெல்வேலியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதிய பேருந்து நிலையத்தில் ரூ.11.75 கோடியில் 4 சக்கர வாகன நிறுத்தம், ரூ. 38 கோடியில் பேருந்து நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் நடந்தன.ரூ.13.08 கோடியில் பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தை மேம்படுத்தும் பணிகள், ரூ. 10.5 கோடியில் புதிய பேருந்து நிலையம் அருகில் அறிவியல் பூங்கா, ரூ.12.31 கோடியில் 7 பூங்காக்கள் மேம்பாடு, ரூ.3.95 கோடியில் தெரு துடைக்கும் இயந்திரம் மற்றும் கழிவுநீர் உறிஞ்சும் வாகனம் கொள்முதல், ரூ.10 கோடியில் கூடுதல் எல்இடி விளக்குகள் மற்றும் உயர் கோபுர விளக்குகள், ரூ.6.75 கோடியில் த.மு. சாலையில் இருசக்கர வாகன நிறுத்தம், ரூ.2.84 கோடியில் 27-வது வார்டு என்ஜிஓ காலனி பகுதியில் மிதிவண்டிகள் செல்ல பாதை அமைத்தல் என்று மொத்தம் ரூ.110.19 கோடியில் திட்டப்பணிகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு குத்துவிளக்கேற்றினார். மாநகராட்சி ஆணையர் பா.விஷ்ணு சந்திரன், மாநகர காவல் ஆணையர் செந்தாமரை கண்ணன், எம்எல்ஏ மு. அப்துல்வகாப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருநெல்வேலி வேய்ந்தான்குளம் எம்.ஜி.ஆர். பேருந்துநிலையம் மற்றும் பாளையங்கோட்டை பேருந்து நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டதை அடுத்து இங்கிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டன.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருநெல்வேலி மண்டலம் சார்பில் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 559 புறநகர் பேருந்துகள் மூலமாக 1,380 நடைகளும், அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலமாக 186 நடைகளும், 24 நகர பேருந்துகள் மூலமாக 210 நடைகளும் தினமும் இயக்கப்படுகின்றன.
புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள பாளை பேருந்து நிலையம் வழியாக 110 பேருந்துகள் மூலம் 820 நடைகள் தினமும் இயக்கப்படுகின்றன என்று அரசு போக்குவரத்து கழகம் தெரி வித்துள்ளது.
திருநெல்வேலி புதிய பேருந்துநிலையம் ஒன்றரை ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளதை அடுத்து, ஏராளமானோர் இதைக்காண வந்தனர்.பெருமாள்புரத்தில் செயல்பட்டுவந்த தற்காலிக பேருந்து நிலையம் வெறிச்சோடியது. புதிய பேருந்து நிலைய கடைகள் நேற்று திறக்கப்படவில்லை.
எந்த ஊருக்கு எங்கே?வேய்ந்தான்குளம் பேருந்து நிலையத்தில் எந்தெந்த ஊர்களுக்கு, எந்த நடைமேடையில் இருந்து பேருந்துகள் புறப்படும் என்ற விவரம்:நடை
மேடை ஊர்கள்1 நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம் மற்றும் சிவப்பு வண்ண நகரப் பேருந்துகள்.2 திருச்செந்தூர், ஆத்தூர், உடன்குடி, சாத்தான்குளம், திசையன்விளை.3 தூத்துக்குடி, சங்கரன்கோவில், ராஜபாளையம், தேனி, குமுளி.4 தென்காசி, சுரண்டை, புளியங்குடி, கடையம், களக்காடு, பாபநாசம்.5 கோவில்பட்டி, மதுரை, திருச்சி, கோவை, திருப்பூர், திண்டுக்கல்.6 சென்னை, பெங்களூரு, திருப்பதி, ஊட்டி, புதுச்சேரி, வேளாங்கண்ணி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT