Published : 08 Dec 2021 04:08 AM
Last Updated : 08 Dec 2021 04:08 AM

முதலிபாளையம் சின்னகுளத்துக்கு தண்ணீர் கொண்டு வர வேண்டும் : மாவட்ட வருவாய் அலுவலரிடம் மக்கள் வலியுறுத்தல்

திருப்பூர்

திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது.

இதில் முதலிபாளையம் அருகே மானூர் பகுதியை சேர்ந்த மக்கள் அளித்த மனு: மாணிக்காபுரம் பெரியகுளத்துக்கு வாய்க்கால் மூலமாக தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. இதனால் கிளை குளமான சின்னகுளத்துக்கு, நொய்யல் ஆற்றுநீர் முற்றிலுமாக வருவதில்லை. இதன்காரணமாக, சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. சின்னகுளம் தண்ணீர் மானூர்,முத்துநகர், கங்கேநாயக்கன்பாளையம், தொட்டிபாளையம், ஹவுசிங் யூனிட் பகுதியை சுமார்5,000 பேருக்கு நிலத்தடி நீராதாரமாக உள்ளது. எனவே சின்னகுளத்துக்கு தண்ணீர் கொண்டுவர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மூலனூர் மொங்கநல்லாம்பாளையத்தை சேர்ந்தவர் செல்வராணி (41) என்பவர் அளித்த மனு: எனது கணவர் குழந்தைவேல் (50). விவசாயி. எங்களுக்கு 10 வயதில் மகன், 20 வயதில் மகள் உள்ளனர். கடந்த மே மாதம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எனது கணவரை, கரூர் அரசு மருத்துவமனை கரோனா வார்டில் அனுமதித்திருந்தோம். கடந்த மே 9-ம் தேதி அவர் உயிரிழந்தார். நிமோனியாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

எனவே இரு குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் இரண்டையும் கருத்தில் கொண்டு, வங்கியில் எனது கணவர் பெற்ற ரூ. 10 லட்சம் விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு வழங்கப்படும் இழப்பீட்டை பெற்றுத்தரவும், குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கவும் தமிழக அரசுக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரைக்க வேண்டும்.

திருப்பூர் வடக்கு ஒன்றியம் மார்க்சிஸ்ட் கட்சி நெருப்பெரிச்சல் கிராமத்தை சேர்ந்த ஒன்றியக்குழு உறுப்பினர் ஏ.சிகாமணி தலைமையிலான மக்கள் அளித்த மனு:

நெருப்பெரிச்சல் கிராமத்துக்கு உட்பட்ட வாவிபாளையம், நெருப்பெரிச்சல் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கடந்த 1972-ம் ஆண்டு இலவச பட்டா வழங்கப்பட்டது. நெருப்பெரிச்சல் பகுதியை சேர்ந்த 15 பேருக்கு மந்தை புறம்போக்காகவும், வாவிபாளையத்தை சேர்ந்த 14 பேருக்கு சந்தை புறம்போக்காகவும் வருவாய் துறை ஆவணத்தில் உள்ளது. இதனால் எங்களது பட்டா நிலத்தை, முழுமையாக அனுபவிக்க முடியாத நிலை உள்ளது. வங்கியில் கடன் உதவி, மின்சாரம், தண்ணீர் மற்றும் அரசின் அடிப்படை பலன்களைக்கூட பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல வாரிசுதாரர்கள் பட்டாபெறுவதற்கும் இடையூறுஏற்படுகிறது. எனவே மேற்காணும் பகுதியை சேர்ந்தவர்களுக்கு நத்தம் புறம்போக்காக வகை மாற்றம் செய்துதர வேண்டும், என குறிப்பிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x