Published : 05 Dec 2021 04:07 AM
Last Updated : 05 Dec 2021 04:07 AM
சேலம்- விருத்தாசலம் அகல ரயில் பாதையை மின் மயமாக்குதல் திட்டத்தில் நேற்று ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
சேலம் ரயில்வே கோட்டத்தின் முக்கிய வழித்தடங்களில் ஒன்றாக சேலம்- விருத்தாசலம் ரயில் பாதை உள்ளது. சேலத்தை புதுச்சேரி மற்றும் தென் மாவட்டங்களுடன் இணைக்கும் இந்த ரயில் வழித்தடத்தை மின் மயமாக்கும் பணி கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரலில் தொடங்கப்பட்டது.
இதன்படி, விருத்தாசலம் முதல் சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் வரை மின் இணைப்புக்கான புதிய மின் கம்பங்கள் நிறுவுதல், அவற்றுக்கு மின் கம்பிகளால் இணைப்பு கொடுத்தல், வழி நெடுக உள்ள ரயில் நிலையங்களில் மின் இணைப்பு ஏற்படுத்துவது உள்ளிட்ட பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சேலம்- விருத்தாசலம் ரயில் பாதையின் மின்மயமாக்கல் பணிகள் குறித்து மின்சார ரயில் இன்ஜினைப் பயன்படுத்தி சோதனை ஓட்டம் நடைபெற்றது.
இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
சேலம்- விருத்தாசலம் வழித்தடத்தை மின் மயமாக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் மின்சார ரயில் இயக்கி சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது. இதற்காக, 25 கிலோ வோல்ட் மின்சார பாதையில் பிரத்யேக ரயில் இன்ஜின் மூலம் நேற்று சேலத்தில் இருந்து விருத்தாசலம் வரை சோதனை நடத்தப்பட்டது. அடுத்த கட்ட ஆய்வு ஓரிரு வாரங்களில் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT