Published : 03 Dec 2021 03:08 AM
Last Updated : 03 Dec 2021 03:08 AM

திருச்சியில் மொழிப்போர் தியாகி சண்முகத்தின் - நினைவிடத்தை மறைத்த கொட்டகை அகற்றம் :

திருச்சி

‘இந்து தமிழ்’ நாளிதழ் செய்தி எதிரொலியாக திருச்சியில் மாநகராட்சி கட்டுமானப் பணிக்காக, மொழிப்போர் தியாகி விராலிமலை சண்முகம் நினைவிடத்தை மறைத்து அமைக்கப்பட்டிருந்த கொட்டகையை மாநகராட்சி ஊழியர்கள் நேற்று அகற்றினர்.

தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது தற்கொலை செய்து கொண்ட கீழப்பழுவூர் சின்னச்சாமி, விராலிமலை சண்முகம் ஆகியோரது உடல்கள் தென்னூர் உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையில் அடக்கம் செய்யப்பட்டு, நினைவிடம் அமைக்கப்பட்டது. இங்கு ஆண்டுதோறும் ஜன.25-ம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

மேலும், திருச்சி பாலக்கரையில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்துக்கு சின்னச்சாமி- சண்முகம் மேம்பாலம் என 11.11.2006-ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி பெயர் சூட்டி, திறந்து வைத்தார். கம்பரசம்பேட்டையில் உள்ள காவிரி பூங்காவில் சின்னச்சாமிக்கு சிலை வைக்கப்பட்டு அதை அப்போதைய முதல்வர் ஜெ.ஜெயலலிதா திறந்து வைத்தார்.

இந்தநிலையில் திருச்சி மாநகராட்சி சார்பில் நகர்ப்புற சுகாதார நிலைய கட்டுமானப் பணிக்காக மொழிப்போர் தியாகி விராலிமலை சண்முகம் நினைவிடத்தை மறைத்து கொட்டகை அமைக்கப்பட்டிருந்தது. மேலும், அந்த பகுதி முழுவதும் குப்பைமேடாக காட்சியளித்தது.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழில் நேற்று புகைப்படத்துடன் செய்தி வெளியானது. இந்த செய்தியைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் அலுவலகத்திலிருந்து வந்த தகவலையடுத்து, மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு உத்தரவின் பேரில், மாநகராட்சி அலுவலர்கள், அந்த கொட்டகையை அப்புறப்படுத்தி, நினைவிடம் இருந்த பகுதியிலிருந்த குப்பையை அகற்றி தூய்மைப்படுத்தினர்.

இந்நிலையில், மொழிப்போர் தியாகிகள் நினைவிடம் உள்ள பகுதியில் மணிமண்டபம் கட்ட வாய்ப்புள்ளதா என ஆய்வு செய்து பரிந்துரை அனுப்பவும் மாவட்ட நிர்வாகத்துக்கு முதல்வர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது.

2016-ல் மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தில் இங்கு அஞ்சலி செலுத்த வந்த மு.க.ஸ்டாலின், மொழிப்போர் தியாகிகளுக்கு மணிமண்டபம் கட்டி, சிலை வைப்பதாக உறுதியளித்த அதிமுக அரசு எதுவும் செய்யவில்லை என குற்றஞ்சாட்டினார்.

தற்போது திமுக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில், மொழிப்போர் தியாகிகளுக்கு கவுரவமான முறையில் மரியாதை அளிக்கப்படும் என நம்புவதாக தமிழ் ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x