Published : 03 Dec 2021 03:09 AM
Last Updated : 03 Dec 2021 03:09 AM
திருவண்ணாமலை அருகே ஏமாற்றி அபகரிக்கப்பட்டுள்ள வீடு மற்றும் காலி மனையை மீட்டுத் தரக்கோரி ஆட்சியர் பா.முருகேஷிடம் மூதாட்டி நேற்று மனு அளித்துள்ளார்.
திருவண்ணாமலை அடுத்த சமுத்திரம் கிராமம் பூந்தமல்லி தெருவில் வசிப்பவர் பஞ்சாட்சரம் மனைவி சிந்தாமணி(85). இவர், ஆட்சியர் பா.முருகேஷிடம் நேற்று அளித்துள்ள மனுவில், “கணவர் பஞ்சாட்சரம், கடந்த 1994-ல் உயிரிழந்துவிட்டார். எனக்கு சொந்தமாக சமுத்திரம் கிராமத்தில் 1,152 சதுரடி காலி மனை மற்றும் அதில் சிறிய ஓட்டு வீடு உள்ளது. நான், அதில் வசித்து வருகிறேன். என்னை கவனித்துக் கொள்ள, எனது கணவரின் உறவு வழி பெண் அடிக்கடி வந்து செல்வார். இதனை பயன்படுத்தி, வாரிசு சான்றிதழில் தனது பெயரை அப்பெண் சேர்த்துள்ளார். இது எனக்கு தெரியாது.
இந்நிலையில் வங்கியில் கடன் வாங்கித் தருகிறேன் என கூறி, என்னை அழைத்து சென்று கடந்த 2020 ஜூலை 29-ம் தேதி, தானசெட்டில்மென்ட் ஆவணத் தில் தனது மகன் பெயருக்கு, நான் வாழ்ந்து வரும் ஓட்டு வீடு மற்றும் காலி இடத்தை அப்பெண் எழுதி வாங்கி கொண்டுள்ளார். கடன் பத்திரம் என கூறியதால், நான் கையொப்பமிட்டுள்ளேன். மேலும் அப்பெண்ணும், அவரது கணவர் மற்றும் மகன் ஆகியோர், எனது வீட்டுக்கு டிசம்பர் 1-ம் தேதி (நேற்று முன்தினம்) வந்து, வீட்டில் இருந்த எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வெளியேற்றினர்.
நான், தற்போது உண்ண உணவு இல்லாமலும், தங்க இடம் இல்லாமல் தவித்து வருகிறேன். என்னை ஏமாற்றி, எனக்கு தெரியாமல் என்னுடைய இடத்தை எழுதி வாங்கி கொண்டது மட்டும் இல்லாமல், இடத்தையும் அபகரித்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆதரவற்ற நிலையில் உள்ளதால், எனது வீடு மற்றும் இடத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும்” என்றனர்.
மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர், இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வருவாய்த் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT