Published : 01 Dec 2021 06:40 AM
Last Updated : 01 Dec 2021 06:40 AM

ஜலகண்டேஸ்வரர் கோயில் வளாகத்தில் தண்ணீர் தேங்குவதால் - கோயிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை : ராஜகோபுரம் அருகே உற்சவரை தரிசிக்க ஏற்பாடு

வேலூர் கோட்டை‌ ஜலகண்டேஸ்வரர் கோயில் மூலவர் சன்னதியில் சூழ்ந்துள்ள மழைநீர். அடுத்த படம்: கோயில் பிரகாரத்தில் மழைநீர் சூழ்ந்துள்ளது. கடைசிப் படம்: கோயில் நிர்வாகம் சார்பில் ராஜகோபுரம் நுழைவு வாயிலேயே அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் அலங்கரித்து வைக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. படங்கள்: வி.எம்.மணிநாதன்.

வேலூர்

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ் வரர் கோயிலுக்குள் மழை நீர் சூழ்ந்துள்ளதால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப் பட்டுள்ளது.

வேலூர் கோட்டை ஜலகண் டேஸ்வரர் கோயில் வளாகம் முழுவதிலும் அகழி தண்ணீர் சூழ்ந் துள்ளது. கடந்த 12-ம் தேதி முதல் கோயில் வளாகம் முழுவதும் குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது.

கோயிலுக்குள் முழங்கால் அளவு தண்ணீரில் பக்தர்கள் நடந்து சென்று சுவாமி தரிசனம் செய்து வந்தனர். அகழி நீர்மட்டம் உயர்ந்ததால், கோயிலுக்குள்ளும் நீர்மட்டம் தற்போது உயர்ந்து கொண்டே வருகிறது. கோயில் வளாகத்தில் உள்ள கொடி மரம், அருகேயுள்ள நந்தி பீடம் வரை தண்ணீர் உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் அம்மன் கருவறைக்குள் தண்ணீர் புகுந்தது.

வேலூரில் தொடர்ந்து மழை நீடித்தால் அடுத்த சில நாட்களில் மூலவர் சன்னதியில் தண்ணீர் நுழையும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோயில் வளாகத்தை சூழ்ந்துள்ள தண்ணீரை ஆய்வு செய்தார்‌.

அப்போது அபிஷேக நீர் செல்லும் வழியாக கோயிலுக்குள் தண்ணீர் வந்ததால் அதை மூடி விட்டு, உள்ளே இருக்கக்கூடிய தண்ணீரை மோட்டார் மூலம் உறிஞ்சி எடுத்து தண்ணீரை வெளியேற்ற உத்தரவிட்டார். அதன்படி முயன்றும் தண்ணீரை வெளியேற்ற முடியவில்லை.

ஊற்று மற்றும் தொடர் மழையால் மீண்டும் கோவில் வளாகத்தில் தண்ணீர் தேக்கம் அதிகரித்து கொண்டே இருந்தது. அம்மன் சன்னதி கருவறைக்குள் தண்ணீர் புகுந்ததால், முழங்கால் அளவு தண்ணீரில் நின்று கொண்டு அர்ச்சகர்கள் அம்மனுக்கு பூஜை செய்தனர். தொடர்ந்து நீர் மட்டம் உயர்ந்ததால் நேற்று காலை மூலவர் ஜலகண்டேஸ்வரர் சன்னதி பகுதிகளையும் தண்ணீர் சூழ்ந்தது.

அசுத்தம் அடையும் தண்ணீர்

கோயிலுக்குள் பல்வேறு வழிகளில் இருந்து தண்ணீர் வந்துக் கொண்டிருக்கிறது. சுரங்கப்பாதை அமைந்துள்ள இடம், தண்ணீர் வெளியேறும் குழாய், ஊற்று போன்றவற்றிலிருந்து தண்ணீர் வந்து கொண்டே இருப்பதால் அர்ச்சகர்களும், பக்தர்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ஜலகண்டேஸ்வரர் கோயில் வளாகம் முழுவதிலும் தண்ணீர் கடந்த சில நாட்களாக தேங்கியிருப் பதால் பல இடங்களில் பாசி பிடித்து வழுக்கி விழ விடக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தண்ணீரும் அசுத்தம் அடைந்து வருவதால், நேற்று காலை முதல் கோயிலுக்குள் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

உற்சவர் மற்றும் அம்மன் ராஜகோபுரத்துக்கு வெளியே சிறப்பு அலங்காரம் செய்து அங்கேயே பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. கோயிலுக்கு செல்ல முடியாத பக்தர்கள் ராஜகோபுரம் அருகே நின்று உற்சவரை வழிபட்டு செல்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x