Published : 01 Dec 2021 06:40 AM
Last Updated : 01 Dec 2021 06:40 AM
வேலூர் மாவட்டத்தில் பருவமழை காரணமாக ஏற்பட்ட சேத விவரங்களை கடந்த வாரம் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். இதில், சுமார் 606 ஹெக்டேர் பரப்பில் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர் வகைகள் கனமழையால் சேதமடைந்ததாக அறிக்கை தரப்பட்டது.
இருப்பினும், கனமழையால் மாவட்டம் முழுவதும் சேதமான விவரங்கள் தொடர்ந்து கணக்கெடுப்பு நடந்து வருவதாக மத்திய குழுவினரிடம் அப்போது தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் கனமழையால் சேத மதிப்புஅதிகரித்துள்ளது தற்போது கணக்கெடுப்பின்படி தெரியவந்துள்ளது.தொடர் மழையால் இடிந்த வீடுகள் எண்ணிக்கை 1,084 ஆக உயர்ந்துள்ளது. இதில், 110 வீடுகள் முழுமையாக இடிந்து தரைமட்டமாகியுள்ளன. சுமார் 1,012 ஹெக்டேர் பரப்பில் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இதன் மூலம் மாவட்டம் முழுவதும் 2,638 விவ சாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஒரு வாரத்தில் கணக்கெடுப்பின் மூலம் 2 மடங்கு விவசாய பயிர்கள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தொடர்ந்து கணக்கெடுப்பு நடந்து வருகிறது.
இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் அவ்வப்போது விட்டு, விட்டு பரவலாக மழை பெய்தது. மாலை 5 மணிக்கு பிறகும் ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்தது.
மாவட்டம் முழுவதும் 36 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 3 ஆயிரத்து 285 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 84 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன. 4 ஏரிகள் நிரம்பும் தருவாயில் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT