Published : 30 Nov 2021 03:09 AM
Last Updated : 30 Nov 2021 03:09 AM
மழை, வெள்ளப் பாதிப்பில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என எம்.பி திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அரியலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ‘சமூகநீதிச் சமூகங்களின் ஒற்றுமை' எனும் தலைப்பில் கருத்தரங்கம் நேற்று முன்தினம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்டச் செயலாளர் மு.செல்வநம்பி தலைமை வகித்தார். மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் முன்னிலை வகித்தார். எம்எல்ஏக்கள் அரியலூர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் க.சொ.க.கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கருத்தரங்கத்தில் சிறப்புரையாற்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பியுமான திருமாவளவன் பின்னர் செய்தியாளர் களிடம் கூறியது:
தமிழகத்தில் தொடர்மழையால் பல்வேறு மாவட்டங்களில் அதிகளவில் பாதிப்பு உள்ளது. மழை, வெள்ளப் பாதிப்பில் இருந்து பொதுமக்களை காக்கும் வகையில், தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
தமிழக முதல்வரே களத்தில் இறங்கி பணியாற்றி வருவது கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. வருங்காலங்களில் சென்னையில் மழைநீர் தேங்குவதைத் தவிர்க்கும் வகையில், தனியாக ஒரு ஆணையம் அமைத்து, அதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட வேண்டும்.
நாடாளுமன்ற கூட்டத்தொடரில், மத்திய அரசு விவசாய விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குறித்த மசோதாவை தாக்கல் செய்ய வேண்டும். மின்சார திருத்தச் சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும்.
சசிகலாவின் செயல்பாடு அதிமுக தலைமையில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதில் பொதுமக்களைப் போன்றே நானும் ஒரு பார்வையாளராக இருக்கிறேன். மழை வெள்ளத்தின்போது எதிர்க் கட்சியாக உள்ள அதிமுகவின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை.
ஆட்சியை குறைகூறுவதிலேயே குறியாக உள்ளனர். இவ்வகையான முரண்பாடுகளை களைந்து, மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT