Published : 25 Nov 2021 03:14 AM
Last Updated : 25 Nov 2021 03:14 AM
திருப்பத்தூர் அருகே கனமழை யால் தரைப்பாலம் இடிந்து விழுந்ததால் 10 கிராமங்களுக்கு இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் கடுமை யாக பாதிக் கப்பட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையொட்டி மாவட்டம் முழுவதும் கன மழை பெய்தது. இதனால், மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. கனமழையால் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளன. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடு இழந்த 4 ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், திருப்பத்துார் அடுத்த குரிசிலாப்பட்டில் உள்ள பாம்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அங்குள்ள 2 தரைப் பாலங்களும் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடைந்தன.
இதனால் பூசாரிவட்டம், தளுக்கன் வட்டம், காரை கிணறு, பாபு கொல்லை, கவுண்டர் வட்டம், கொள்ளகவுண்டனூர், வேப்பமரத்து வட்டம், பள்ளத்தூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இடையே போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டது.
இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அன்றாட தேவைக்காக வெளியே செல்ல முடியாமல் கடந்த 10 நாட்களாக தவித்து வருகின்றனர்.
மேலும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் கல்வி நிறுவனங் களுக்கு சென்று வர முடியாமல் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். சிலர் அத்தியாவசிய தேவைக்காக பாலத்தை கடக்க கயிறு கட்டி அதை பிடித்துக்கொண்டு ஆபத்தை உணராமல் சென்று வருகின்றனர். தரைப்பாலம் உடைந்து அங்கு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதால் பொதுமக்கள் விபரீதம் அறியாமல் சென்று வருவது வேதனையளிக்கிறது என சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி யுள்ளனர்.
எனவே, பேராபத்து ஏற்படுவ தற்குள் அப்பகுதியில் புதிய பாலம் அமைத்துத் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT