Published : 24 Nov 2021 03:09 AM
Last Updated : 24 Nov 2021 03:09 AM
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ள வேய்ந்தான்குளத்தில் பாதாள சாக்கடை நேரடியாக கலப்பது குறித்து இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
திருநெல்வேலி மாநகரிலுள்ள முக்கிய நீராதாரங்களில் வேய்ந்தான்குளம் முக்கியமானது. இந்த குளத்தின் ஒரு பகுதியை நிரப்பி பேருந்து நிலையமாக்கியிருக்கும் நிலையில், பேருந்து நிலையத்திலிருந்து கழிவுகள் குளத்தில் கலக்கும் பிரச்சினை நீண்டகாலமாகவே இருக்கிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், புதிய பேருந்து நிலையத்தை மறுகட்டமைக்கும் பணி நடைபெறுகிறது. பல கோடிரூபாய் செலவு செய்தபோதும், பேருந்து நிலைய கழிவு நீர், குளத்தில் கலக்கும் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. இதுகுறித்து, இயற்கை ஆர்வலர்கள் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றும் அவர்கள் அதை பொருட்படுத்தவில்லை.
சமீபத்தில், வேய்ந்தான்குளம் தூர்வாரப்பட்டு, குளத்தின் உள்பகுதியில் மணல் திட்டுகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. சமீபத்தில் பெய்த மழையில் குளத்தில் தண்ணீர் பெருகியிருக்கிறது. இந்த குளத்தின் கரைகளை பலப்படுத்தி, நடை பயிற்சிக்கான பாதை, சிறுவர் பூங்கா, படகு குழாம் ஆகியவற்றை தனியார் பங்களிப்புடன் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக தற்போதுள்ள தற்காலிக பேருந்துநிலையத்தையொட்டி குளக்கரையில் பெருமளவுக்கு மணல் நிரப்பப்பட்டு வருகிறது. இதனால் எதிர்காலத்தில் குளக்கரை வணிகமயமாகி குளம் அழியும் அபாயம்இருப்பதை இயற்கை ஆர்வலர்கள் மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்களிடம் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். ஏற்கெனவே பேருந்து நிலையத்தின் முன்பகுதியில் சிறுவர்களுக்கான பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் குளத்தைநிரப்பி மேலும் ஒரு பூங்கா அமைப்பது ஏன்? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
அத்துடன், குளத்துக்கு நீர்வரும் வழித்தடத்தில் மாநகராட்சியின் பாதாள சாக்கடை பொங்கி வழிந்து மழைநீருடன் குளத்துக்கு வந்து சேகரமாகி கொண்டிருக்கிறது. பேருந்து நிலையத்தின் நுழைவு வாயிலுக்கு எதிர்புறமுள்ள நீர்வரத்து கால்வாயிலும், பேருந்து நிலையத்தின் எதிரே எஸ்டிசி 60 அடி சாலை பகுதியிலிருந்து வரும் கால்வாயிலும் பாதாள சாக்கடை நேரடியாக கலக்கிறது. இதனால், குளத்தின் நீர் மாசுபட்டுள்ளது. இவ்வாறு தண்ணீர் மாசுபடுவதால் குளத்துக்கு பறவைகள் வருவது, நின்றுபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வேய்ந்தான்குளத்தில் படகுகுழாம், சிறுவர் பூங்கா அமைப்பதில் முழுவேகம் காட்டும் நிர்வாகங்கள், பாதாள சாக்கடை கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT