Published : 23 Nov 2021 03:08 AM
Last Updated : 23 Nov 2021 03:08 AM
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே ஆடு திருடியவர்களைப் பிடிக்கச் சென்ற சிறப்பு எஸ்ஐ பூமிநாதன் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மதுரையில் ரோந்து செல்லும் எஸ்ஐ-கள் தற்காப்புக்காக துப்பாக்கி வைத்திருக்க காவல் ஆணையர் பிரேமானந்த் சின்கா அறிவுறுத்தியுள்ளார்.
திருச்சி மாவட்டம், நாவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐ-யாகப் பணியாற்றி வந்தவர் பூமிநாதன் (51). இவரும், தலைமைக் காவலர் சித்திரவேலு என்பவரும் நேற்று முன்தினம் அதிகாலை ரோந்து சென்றனர்.
திருச்சி - புதுக்கோட்டை சாலையில் கீரனூர் அருகே ஆடு திருடிக் கொண்டு இருசக்கர வாகனங்களில் தப்பிய 4 பேரை எஸ்ஐ பூமிநாதன், சித்திரவேலு ஆகியோர் மோட்டார் சைக்கிளில் விரட்டிச் சென்றனர். அப்போது சித்திரவேலு பின்தங்கினார்.
பள்ளத்துப்பட்டி ரயில்வே சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்கி இருந்தது. இதனால் தப்பிக்க முடியாமல் திணறிய ஆடு திருடர்கள் இருவரை பூமிநாதன் பிடித்தார். அப்போது அவர்கள் கத்தியால் குத்தியதில் பூமிநாதன் உயிரிழந்தார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக காவல் துறையினருக்குப் பல்வேறு விழிப்புணர்வை அதிகாரிகள் ஏற்படுத்தியுள்ளனர். குறிப்பாக, இரவு ரோந்து செல்லும் காவல் துறையினர் முன்னெச்சரிக் கையோடு செயல்பட காவல் உயர் அதிகாரிகள் சில அறிவுரைகளைக் கூறியுள்ளனர்.
மதுரை மாநகரில் ரோந்து போலீஸார் துப்பாக்கியுடன் செல்ல காவல் ஆணையர் பிரே மானந்த் சின்கா ஏற்கெனவே அறிவுறுத்தி உள்ளார். எஸ்ஐ பூமிநாதன் கொலையைத் தொடர்ந்து அந்த உத்தரவு மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தனியாக ரோந்து செல்லக் கூடாது. சந்தேகத்தின்பேரில் யாரையாவது பிடித்தால் முன் னெச்சரிக்கையோடு அணுக அறி வுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: 2012 அக்டோபரில் திருப்பாச்சேத்தி அருகில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த எஸ்ஐ ஆல்வின் சுதன் ரவுடிகளால் படுகொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அனைத்து எஸ்ஐ-களுக்கும் கைத்துப்பாக்கி வழங்க உத்தரவிடப்பட்டது. இருப்பினும் இது நடைமுறையில் இல்லை. திருச்சி எஸ்ஐ பூமிநாதன் துப்பாக்கி வைத்திருந்தால் தப்பி யிருக்கலாம். இனிமேலாவது ரோந்து செல்லும் எஸ்ஐ-கள் மற்றும் சிறப்பு எஸ்ஐ-களுக்கு துப்பாக்கி அவசியம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT