Published : 23 Nov 2021 03:09 AM
Last Updated : 23 Nov 2021 03:09 AM

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் - ஜாதி சான்றிதழ் வழங்கக்கோரி கணிக்கர்கள் மனு :

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாதிச் சான்றிதழ் வழங்கக்கோரி மனு கொடுக்க வந்த கணிக்கர்கள்.

திருவண்ணாமலை

தி.மலை மாவட்ட மக்கள் குறை தீர்வு கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடை பெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமாரசாமி தலைமை வகித்தார். அப்போது பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பொதுமக்கள் மனு அளித்தனர்.

ஜாதி சான்றிதழ் கேட்டு மனு அளிக்க வந்த கணிக்கர்கள் (குடுகுடுப்பைக் காரர்கள்) சமுதா யத்தைச் சேர்ந்தவர்கள் கூறும்போது, "தி.மலை அடுத்த அய்யம் பாளையம் புதூர் பகுதியில் 100 குடும்பங்களும் மற்றும் ஆரணி பள்ளிக் கூட தெருவில் 50 குடும்பங்களும் வசித்து வருகிறோம். எங்களது பிள்ளைகள், சுமார் 300 பேர் பள்ளிகளில் படிக்கின்றனர். அவர்களுக்கு ஜாதி சான்றிதழ் இல்லாததால், பள்ளி படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு ஜாதி சான்றிதழ் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டனர்.

பின்னர் அவர்கள் மனு அளித்தனர். முன்னதாக, ஆட்சியர் அலுவலகம் முன்பு குடு குடுப்பையை ஆட்டி குறிசொல்வது போல் வந்தனர். அப்போது அங்கிருந்த காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தில், அவர்கள் வைத்திருந்த பை உள்ளிட்ட உடமைகளை சோதனைக்கு உட்படுத்தினர்.

மலைக்குறவர்கள் கோரிக்கை

ஜாதி சான்றிதழ் கேட்டு மனு அளிக்க வந்த மலைகுறவ இனத்தைச் சேர்ந்தவர்கள் கூறும் போது, “தண்டராம்பட்டு அடுத்த தானிப்பாடி புதுத் தெருவில் மலைக்குறவ இனத்தைச் சேர்ந்த 30 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்களது பிள்ளைகளின் படிப்பை தொடர வேண்டும் என்பதற்காக பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளோம். ஆனால், எங்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கவில்லை. இதனால், கல்வி கற்க முடியாத நிலை உள்ளது. எங்களது பிள்ளை களின் கல்விக்காக ஜாதி சான்றிதழ் மற்றும் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்” என்றனர். பின்னர், அவர்கள் ஆட்சியர் அலு வலகத்தில் மனு அளித்தனர்.

பாசன கால்வாய் ஆக்கிரமிப்பு

விடிவெள்ளி விவசாயிகள் நலச்சங்கத்தினர் சார்பில் அளிக்கப் பட்டுள்ள மனுவில், “ஆரணி அடுத்த வேலப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட புனலப்பாடி கிராமத்தில் உள்ள கல்லேரிப்பட்டு ஏரி மூலம் 350 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

இந்த ஏரியில் இருந்து தண்ணீர் செல்லும் பாதையான பாசனக் கால்வாய் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது. இதனால் ஏரியின் கரை உடையும் அபாயம் உள்ளது. மேலும், விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் சேதமடையும்.

எனவே, பாசனக் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்ற மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x