Published : 23 Nov 2021 03:09 AM
Last Updated : 23 Nov 2021 03:09 AM
வேலூர் வடவிரிஞ்சிபுரம் காமராஜ புரம் கிராமத்தில் பாலாற்றின் கரை யோரத்தில் மண் அரிப்பால் 14 வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மாற்று இடத்தில் பட்டா வழங்கப்படும் என வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் வட்டத்துக்கு உட்பட்ட வட விரிஞ்சிபுரம் காமராஜபுரம் பாலாற்றின் கரையோரத்தில் 28 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. பாலாற்றில் கடந்த 17-ம் தேதி முதல் வெள்ளப்பெருக்கு அதிகரித்த நிலையில், 600-க்கும் மேற்பட்ட காமராஜபுரம் கிராம பொதுமக்களை வருவாய்த்துறையினர் பத்திரமாக மீட்டு முகாம்களில் தங்க வைத் துள்ளனர்.
இதற்கிடையில், பாலாற்றின் கரையோரத்தில் உள்ள 28 வீடுகளில் கடந்த 3 நாட்களில் 11 வீடுகள் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டன. கரையோரத்தில் மீதமுள்ள வீடுகளும் எந்த நேரத்திலும் ஆற்றில் சரிந்து அடித்துச் செல்லும் என்பதால் வீட்டின் உரிமையாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
தங்களது கண் எதிரிலேயே வீடுகள் அடித்துச் செல்வதைப் பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுது வருகின்றனர். நேற்று காலை மேலும் 3 வீடுகள் இடிந்து ஆற்றில் விழுந்தன. வீட்டில் இருந்த பொருட்கள் வெள்ளத்தில் மிதந்தபடி சென்றன. வெள்ளத்தில் வீடுகள் இடிந்து விழும் வீடியோக்கள் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
இதுகுறித்து காமராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த பிரபு என்பவர் கூறும்போது, ‘‘இதுவரை 14 வீடுகள் இடிந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. மண் அரிப்பால் மேலும், 4 வீடுகள் எந்த நேரமும் சரிந்து விழலாம். கிராமத்தின் கரையோரம் வெள்ளம் வராமல் இருக்க ஆற்றின் நடுப்பகுதியில் வெடி வைத்து திசை திருப்பிவிட வேண்டும். பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்’’ என்றார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட இடத்தை வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது, ஆற்றின் கரையோரத்தில் மண் அரிப்பால் அடித்துச் செல்லப்பட்ட வீடுகளின் உரிமையாளர்களுக்கு மாற்று இடத்தில் பட்டா வழங்க ஏற்பாடுகள் செய்து விட்டோம். சேதமடைந்த வீடுகளுக்கு அரசின் சார்பில் உரிய இழப்பீடு வழங்கப்படும் என உறுதியளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT