Published : 22 Nov 2021 03:07 AM
Last Updated : 22 Nov 2021 03:07 AM

சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் அருகே - கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளநீர் : மடத்தான்தோப்பு கிராமத்தில் தண்ணீர் புகுந்தது

காட்டுமன்னார்கோவில் அருகே முட்டம் பாலம் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளநீர்.

கடலூர்

தென்பெண்ணையாற்றில் எற்பட்ட வெள்ளப் பெருகினால் கடலூர் பகுதியில் பல இடங்களில் குடியிருப்புகளில் வெள்ளநீர் புகுந்தது. மழை பெய்யாததால் தற்போது வெள்ளநீர் படிப்படியாக வடிந்து வருகிறது.

தொடர் மழையால் சாத்தனூர் அணையில் இருந்து 70 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. மேலும் கடலூர், விழுப்புரம் மாவட் டங்களில் பெய்த கனமழையால் காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் மூலம் கடந்த 19-ம்தேதி தென்பெண்ணையாற்றில் சுமார் 1 லட்சம் கன அடி தண்ணீர் வரத்து இருந்தது. ஆற்றிலும்வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இரு கரைகளையும் தொட்ட படி தண்ணீர் சென்றது. இதனால்கடலூர் பகுதியில் குண்டு உப்பளவாடி, தாழங்குடா, பெரியகங் கணாங்குப்பம், உச்சிமேடு உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது.

கடலூரில் சுமார் 5 ஆயிரம் வீடுகளில் தண்ணீர் புகுந்தது. சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விளைநிலம் மூழ்கியது. மீட்பு குழுவினர் குடியிருப்பு பகுதிகளில் இருந்து படகு மூலம் பொதுமக்களை மீட்டனர். பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு மாவட்ட நிர்வாகத்தால் உணவு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் கடலூர் பகுதியில் நேற்று முன்தினம் அதிக மழையில்லாததால் கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குடியிருப்புகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீர் வடிய தொடங்கியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் மழைநீர் வடிந்து செல்லாமல் மீண்டும் குடியிருப்புகளை சூழ்ந்தது. நேற்று மழையில்லாததால் கடலூர் பகுதியில் தாழ்வான இடங்களில் தேங்கி நின்ற மழை, வெள்ளம் நீர் வடிய தொடங்கி உள்ளது.

இதையடுத்து முகாம்களில் தங்கியிருந்த பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்ப தொடங்கி உள்ளனர். மழை குறைந்துள்ளதால் ஆறுகளில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது.

தற்போது கெடிலம் ஆற்றில் விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீரும், தென்பெண்ணை ஆற்றில் விநாடிக்கு 35 கன அடி தண்ணீரும் செல்கிறது.

குடியிருப்புகளில் தேங்கியுள்ள மழைநீர் வடிய தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர். இந்த நிலையில் கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் விநாடிக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் சிதம்பரம் அருகே உள்ள மடத்தான்தோப்பு கிராமத்தில் வெள்ளநீர் புகுந்துள்ளது. மேலும் தீவு கிராமங்களான அக்கரை ஜெயங்கொண்டப்பட்டினம், திட்டுகாட்டூர், கீழ குண்டலபாடி ஆகிய கிராமங்களில் கொள்ளிடம் ஆற்று தண்ணீர் ஏறிக் கொண்டி ருக்கிறது.

மேலும் கொள்ளிட கரையோர கிராமங்களில் ஆற்றுப்படுகை பகுதியில் போடப்பட்டிருந்த வாழை, கத்தரி, மிளகாய், முல் லைப் பூ செடி தண்ணீரில் மூங்கி யுள்ளது.

சிதம்பரம் வட்டாட்சியர் ஆனந்த் மற்றும் அதிகாரிகள் அப்பகுதியை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் சங்கர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கொண்ட குழுவினர் தீவு கிராமங்களில் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x