Published : 21 Nov 2021 03:07 AM
Last Updated : 21 Nov 2021 03:07 AM

தமிழர்களின் பாரம்பரிய மீன்பிடி முறைகளை பாதுகாக்கும் தனுஷ்கோடி மீனவர்கள் : நவம்பர் 21: உலக மீனவர் தினம்

ராமேசுவரம்

அழிந்து வரும் தமிழர்களின் பாரம்பரிய மீன்பிடி முறைகளான கட்டுமரம், கரைவலை, ஓலை வலை போன்றவற்றை தனுஷ்கோடி மீனவர்கள் இன்னமும் உயிர்ப்போடு பாதுகாத்து வருகின்றனர்.

பண்டைய தமிழர்கள் வாழ்ந்த இடங்கள் கடல், ஆறு, ஏரி, குளம் என நீர்நிலைகளால் சூழப்பட்டிருக்கின்றன. நவீன போக்குவரத்து வசதிகள் அற்ற பண்டைய காலங்களில் நீர்நிலைகளை போக்குவரத்துக்குப் பயன்படுத்தலாம் என்ற எண்ணத்தின் விளைவாக மரத்துண்டுகளை ஒன்றாக கட்டி தண்ணீரில் மிதக்க வைக்க முடியும் என்பதை தமிழர்கள் கண்டறிந்தனர். இதுவே கட்டு மரம்=கட்டுமரம் என்றானது.

1690-ம் ஆண்டு தமிழகத்துக்கு கடல் மார்க்கமாக வந்த வில்லியம் டம்பியர் என்ற ஆங்கிலேயப் பயணி தமிழர்களின் கட்டுமரங்களைப் பற்றித் தனது பயணக் குறிப்பில் எழுதியுள்ளார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆங்கில அகராதி “Catamaran" என்ற வார்த்தை 17-ம் நூற்றாண்டில் தமிழில் கட்டுமரம் என்ற சொல்லில் இருந்து வந்ததாக குறிப்பிட்டுள்ளது. இன்றும் உலகில் எல்லா மொழிகளிலும் கட்டுமரம் என்றே வழங்கப்படுகிறது. ஆனால் இந்த உலகத்தையே புரட்டிப் போட்ட கண்டுபிடிப்புகளாக நெருப்பையும், சக்கரத்தையும் சொன்ன வரலாற்று ஆய்வாளர்கள் கட்டுமரத்தை கூறத் தவறி விட்டனர்.

தமிழகத்தில் விசைப்படகு மீன்பிடி அறிமுகப்படத்தப் பட்டு பின்னர் தமிழர்களின் பாரம்பரிய மீன்பிடி முறைகளான கட்டுமரம், கரைவலை, ஓலை வலை போன்றவற்றை அழிவின் விளிம்பில் உள்ள நிலையில் அதனை தனுஷ்கோடி மீனவர்கள் உயிர்ப்போடு பாதுகாத்து வருகின்றனர். தமிழகத்தில் விசைப்படகு அனுமதிக்க தொடங்கிய நாளில் இருந்து கட்டுமரங்களின் அழிவு தொடங்கி விட்டது. கட்டுமரங்களுக்கு மீண்டும் தெர்மாக்கோல் மூலம் புத்துயிர் அளிக்கத் தொடங்கியுள்ளனர் தனுஷ்கோடி மீனவர்கள்.

தனுஷ்கோடி மீனவப் பெண்கள் ஆண்களுக்கு நிகராகக் கரைவலை இழுக்கிறார்கள். தமிழர்களின் பாரம்பரிய மீன்பிடி முறைகளில் ஓலை வலை மீன்பிடி முறை முதன்மையானது. இந்தக் ஓலை வலை மீன்பிடி முறையை தனுஷ்கோடி மீனவர்கள் தற்போதும் உயிர்ப்போடு செய்து வருகின்றனர்.இந்த பனை ஓலை மீன்பிடி முறைக்கு அதிக முதலீடு தேவை கிடையாது. இதனால் கடல் வளத்துக்கும் எந்த பாதிப்பும் கிடையாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x