Published : 20 Nov 2021 03:07 AM
Last Updated : 20 Nov 2021 03:07 AM

கிருஷ்ணகிரியில் கொட்டித் தீர்த்த கனமழை - தென்பெண்ணை ஆற்றில் 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றம் :

கிருஷ்ணகிரி அணையில் இருந்து பிரதான மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டதால் தென்பெண்ணையாற்றில் சீறிப் பாய்ந்து செல்லும் தண்ணீர். அடுத்த படம்: கிருஷ்ணகிரி அணை இணைப்புச்சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனங்கள் நீந்தியபடி சென்றன. படங்கள்: எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் கொட்டிய மழையால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகா, ஆந்திரா மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தென்பெண்ணை ஆறு, அதன் கிளை நதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஓசூர் கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி அணை, ஊத்தங்கரை பாம்பாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கெலவரப்பள்ளி அணைக்கு விநாடிக்கு 3,500 கனஅடியும், கிருஷ்ணகிரி அணைக்கு 16,600 கனஅடியும், பாம்பாறு அணைக்கு 8,123 கனஅடியும் நீர்வந்து கொண்டிருந்தது. அணைகளின் பாதுகாப்பு கருதி கெலவரப்பள்ளி அணையில் விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடியும், கிருஷ்ணகிரி அணையில் 19,600 கனஅடியும், பாம்பாறு அணையில் இருந்து 7,999 கனஅடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

இதனால் தென்பெண்ணை ஆற்றில் விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆட்சியர் ஆய்வு

கிருஷ்ணகிரி அணை, பாம்பாறு அணை பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது: மாவட்டத்தில் மழைக்கு இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். குடிசை வீடுகள் உட்பட 374 வீடுகள் சேதமாகி உள்ளன. 120 ஹெக்டேர் நெற்பயிர்கள் சேதமாகி உள்ளது. பயிர் சேதம் மதிப்பீடு செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றார்.

இதேபோல் எம்எல்ஏக்கள் கே.பி.முனுசாமி, அசோக்குமார், மதியழகன் முன்னாள் எம்எல்ஏ செங்குட்டுவன் ஆகியோர் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர்.

சாலையில் வெள்ளம்

கிருஷ்ணகிரி பழையபேட்டை, பெரியார் நகர், செட்டியம்பட்டி, போச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது.

ஊத்தங்கரை பரசனை ஏரி நிரம்பி வெளியேறிய உபரிநீர், அண்ணா குடியிருப்பு பகுதியில் புகுந்ததால், 200-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர். ஊத்தங்கரை - சிங்காரப்பேட்டை சாலையில் தண்ணீர் அதிகளவில் சென்றதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேருந்துகள் செல்ல தடை விதிக்கப்பட்டன.

பயிர்கள் சேதம்

நெல் வயல்கள், கொத்தமல்லி, புதினா, முட்டைகோஸ் பயிர்கள் நீரில் மூழ்கின. பாரூர் ஏரியில் இருந்து விநாடிக்கு 1,311 கனஅடி தண்ணீர் 8 சிறிய மதகுகள் வழியாக திறந்துவிடப்பட்டது. இதில் ஏரிக்கு கீழ் இருந்த 5 ஆயிரம் தென்னை கன்றுகள், 10 ஆயிரம் தேங்காய்கள் அடித்துச் செல்லப்பட்டன. கெலவரப்பள்ளி அணையில் அதிகளவில் திறக்கப்படும் தண்ணீரில் ரசாயன நுரை பொங்க வெளியேறி வருவதால் விவசாயிகள் வேதனை யடைந்துள்ளனர்.

மழையளவு

நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்) விவரம்: ஊத்தங்கரை 136.80 பெணுகொண்டாபுரம் 115.16 போச்சம்பள்ளி 112.20 பாரூர் 105.40 கிருஷ்ணகிரி 108.40 தேன்கனிக்கோட்டை 101, சூளகிரி 94.60, நெடுங்கல் 87.60, தளி 36, ராயக்கோட்டை 33, அஞ்செட்டி 27மிமீ மழை பதிவானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x