Published : 20 Nov 2021 03:09 AM
Last Updated : 20 Nov 2021 03:09 AM
தென்பெண்ணையாற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு எதிரொலியாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையில் இருந்து 51 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப் பட்டதால் 4 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக் கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முக்கிய நதிகளில் ஒன்றான தென்பெண்ணையாற்றில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றம், ஆற்றின் நீர்பிடிப்புப் பகுதிகள் மற்றும் திருவண்ணாமலை மாவட் டத்தில் கடந்த 3 நாட்களாக இடை விடாமல் கொட்டி தீர்க்கும் கன மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் சாத்தனூர் அணைக்கு நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 50,945 கனஅடி தண்ணீர் வருகிறது. புதிய ஷட்டர்கள் பொருத்துவற்காக, பழைய ஷட்டர்கள் அகற்றப்பட்டதால், தண்ணீர் முழுவதும் தென் பெண்ணையாற்றில் வெளியேறு கிறது.
நீர்வரத்து விநாடிக்கு 1 லட்சம் கனஅடியாக அதிகரிக்கக்கூடும் என்பதால், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டம் என 4 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணையாற்றில் கரை யோரம் வசிக்கும் மக்கள், பாது காப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல், ஜவ்வாது மலையில் பெய்துள்ள மிதமான மழையால் குப்பநத்தம், செண்பகத் தோப்பு மற்றும் மிருகண்டா நதி அணை என 3 அணைகளுக்கு நீர்வரத்து தொடர் கிறது. 3 அணைகளில் இருந்தும் தண்ணீர் வெளியேற்றப்படுவதால் செய்யாறு, கமண்டல நாக நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றின் இருபுறங்களிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், தாழ்வானப் பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங் களில் வருவாய்த் துறையினர் தங்க வைத்துள்ளனர்.
நெற்பயிர்கள் சேதம்
இந்நிலையில், திருவண்ணா மலை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை எதிரொலியாக, 800-க்கும் மேற்பட்ட ஏரிகளில் இருந்து தண்ணீர் வெளியேறி, குடியிருப்புப் பகுதிகள், விவசாய நிலங்களை சூழ்ந்துள்ளன. 30 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டிருக்க கூடும் என கூறப்படுகிறது. அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மூழ்கியதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும், நூற்றுக்கணக்கான கிராமங்கள் மற்றும் தாழ்வானப் பகுதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது.
போக்குவரத்து பாதிப்பு
மேலும், விழுப்புரம் – திருவண் ணாமலை சாலையில் ஒன்றரை அடி உயரத்துக்கு தண்ணீர் செல்வதால், கார்–வேன் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
தி.மலையில் 15 செ.மீ., மழை
தி.மலையில் அதிகபட்சமாக 15 செ.மீ., மழை பெய்துள்ளது. மேலும், கீழ்பென்னாத்தூரில் 12.5, தண்டராம்பட்டில் 13, செங்கத்தில் 10.8, கலசப்பாக்கத்தில் 10.3, ஜமுனாமரத்தூரில் 9, போளூரில் 6, ஆரணியில் 9, சேத்துப்பட்டில் 10.8, வந்தவாசியில் 10.1, செய்யாறில் 10, வெம்பாக்கத்தில் 13., மழை பெய்துள்ளன. மாவட்டத்தில் சராசரியாக 11 செ.மீ., மழை பெய்துள்ளது.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT