Published : 19 Nov 2021 03:08 AM
Last Updated : 19 Nov 2021 03:08 AM
கோவையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுவது கோவையின் அடுத்தகட்ட தொழில் விரிவாக்கம், வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு அதிகரிப்புக்கு உதவும் என தொழில் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தொழில் வளத்தையும், கட்ட மைப்பையும் ஊக்குவிப்பதற்காக முதலீட்டாளர்கள் மாநாட்டை அந்தந்த மாநில அரசுகள் முக்கியத்து வம் கொடுத்து நடத்தி வருகின்றன. தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப் பட்டது. அதைத் தொடர்ந்து திமுக அரசு, ஆட்சிக்கு வந்த முதல்மாதத்திலேயே சென்னை கிண்டியில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியது. தொடர்ந்து 2-வதாக சென்னை கலைவாணர் அரங்கில்முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இவ்விரு மாநாடுகளிலும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாகரூ.21 ஆயிரம் கோடிக்கும் அதிகமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ள தாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சூழலில், அடுத்தகட்டமாக 3-வது முதலீட்டாளர்கள் மாநாடு கோவையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் தலைமையில் நடைபெறும் இம் மாநாட்டில், 40 முதல் 45 வெளிநாடு மற்றும் உள்நாட்டின் முன்னணி நிறுவனங்கள் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளன.
கோவையில் நடைபெறவுள்ள முதலீட்டாளர்கள் மாநாடு இங்குள்ள தொழில் துறையின் அடுத்தகட்ட விரிவாக்கம், வளர்ச்சிமற்றும் வேலைவாய்ப்பு அதிகரிப்புக்கு உதவும் என்கின்றனர் தொழில் துறையினர்.
இதுகுறித்து கொடிசியா தலைவர் எம்.வி.ரமேஷ்பாபு கூறும்போது, “இதில் பங்கேற்கும் நிறுவனங்களின் முதலீடுகள் தமிழகத்தின் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் செல்ல வாய்ப்புள்ளது. ஆனால், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வரும் முதலீட்டா ளர்களுக்கு கோவையைப் பற்றியும், இங்குள்ள தொழில் துறை மற்றும் முதலீட்டுக்கான வாய்ப்புகள் பற்றியும் அறிந்து கொள்ள இந்நிகழ்வு ஒரு பாலமாக அமையும்.
இதற்காக கோவையைப் பற்றி முதலீட்டாளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் வீடியோ பதிவு ஒன்றும் நிகழ்வில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. தற்போதுள்ள சூழலில் சென்னைக்கு அடுத்து முதலீட்டாளர்கள் பலர் கோவைக்கு வரவே விரும்புகின்றனர். அத்தகையவர் களுக்கு இந்நிகழ்வு மூலமாக ஒரு புரிதல் கிடைக்கும்போது, நிச்சயமாக முன்னணி சர்வதேச நிறுவனங்களின் முதலீடுகள் கோவைக்கு வர வாய்ப்புள்ளது” என்றார்.
இந்திய ஜவுளித் தொழில் முனைவோர் கூட்டமைப்பின் (ஐடிஎஃப்) தலைவர் பிரபு தாமோதரன் கூறும்போது, “தற்போதுள்ள அரசு உற்பத்தித் துறைக்கு முக்கியத்துவம் அளித்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உற்பத்தித் துறையை மேம்படுத்த பல்வேறு நவீன தொழில்நுட்பம் சார்ந்த முன்னெடுப்புகளை கொண்டு வருவதில் முனைப்பு காட்டி வருகிறது. உதாரணமாக மத்திய அரசு அறிவித்த மாபெரும் தொழிற்பூங்கா திட்டங்களைக் கொண்டு வர முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது. அதுபோன்றே முதலீட்டுக்கான மாநாடுகளை நடத்துவது அவசியமான ஒன்று. கோவையைப் பொறுத்தவரை முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுவது தொழில் துறையின் அடுத்தகட்ட வளர்ச்சி, விரிவாக்கம் மற்றும் வேலைவாய்ப்பு அதிகரிப்புக்கு பெரிதும் உதவும்” என்றார்.
இந்தியத் தொழில் வர்த்தக சபை (கோவை பிரிவு) தலைவர் சி.பாலசுப்ரமணியன் கூறும்போது, “இந்த முதலீட்டாளர்கள் மாநாடு மூலமாக தமிழக முதல்வரை நேரில் சந்தித்து தேவைகளையும், கோரிக்கைகளையும் சொல்வதற் கான வாய்ப்பு எங்களுக்கு கிடைத்துள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT