Published : 19 Nov 2021 03:10 AM
Last Updated : 19 Nov 2021 03:10 AM
நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், நீர் வரத்து அதிகரித்து, பவானிசாகர் அணை முழு கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் 105 அடி வரை 32.8 டிஎம்சி வரை நீரினைத் தேக்கி வைக்க முடியும். கோவை, நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு அணையின் நீர் மட்டம் 104 அடியை எட்டியது. இதையடுத்து, நேற்று மாலை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 104.21 அடியாகவும், நீர் இருப்பு 32.13 டிஎம்சியாகவும் இருந்தது.
அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 8297 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்கு விநாடிக்கு 1800 கனஅடியும், பவானி ஆற்றில் உபரி நீராக 9800 கனஅடியும் நீர் திறக்கப்படுகிறது.
இதையடுத்து, பவானி கரையோரப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பவானி ஆற்றில் துணி துவைக்கவோ, குளிக்கவோ கூடாது என்றும், கால்நடைகளை நீர்நிலை அருகே மேய்க்க விடக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும் இங்குள்ள சூழ்நிலையை பொதுப்பணித் துறையினரும், வருவாய் துறையினரும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT