Published : 19 Nov 2021 03:11 AM
Last Updated : 19 Nov 2021 03:11 AM
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஒரே நாளில் 843 மி.மீ. மழை பதிவாகியிருக்கிறது. தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் மட்டும் 109 மி.மீ. மழை பெய்திருக்கிறது.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நேற்று முன்தினம் மாலையிலும், இரவும் இடி, மின்னலுடன் கனமழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளில் குளம்போல் தண்ணீர் தேங்கியது. நேற்று பகலில் மழை ஓய்ந்திருந்ததால் பலஇடங்களில் தண்ணீர் வடிய தொடங்கியிருந்தது. பாளையங்கோட்டையில் வேய்ந்தான்குளம் பகுதியிலுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் தேங்கியிருந்த தண்ணீர் அருகிலு ள்ள குளத்துக்கு கால்வாய் மூலம் திருப்பிவிடப்பட்டதை அடுத்து நேற்று முன் தினம் இரவிலேயே அங்கு தண்ணீர் வடிந்தது. இதுபோல், பல்வேறு இடங்களிலும் தேங்கிய தண்ணீரை அகற்றும் பணியில் அரசுத்துறைகள் முழுவீச்சில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.
நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் 368.40 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. அதிகபட்சமாக நம்பியாறு அணைப்பகுதியில் 94 மி.மீ. மழை பெய்திருந்தது. பிறபகுதிகளில் பதிவான மழையளவு (மி.மீட்டரில்):
பாளையங்கோட்டை- 85, அம்பாசமுத்திரம்- 65, சேரன்மகா தேவி- 62.40, மணிமுத்தாறு- 18.60, ராதாபுரம்- 29, திருநெல்வேலி- 42.40, நாங்குநேரி- 60, பாபநாசம்- 6, சேர்வலாறு- 3, மூலைக்கரைப்பட்டி- 20, கொடுமுடியாறு- 40.
தென்காசி மாவட்டத்தில் அதிக பட்சமாக சங்கரன் கோவிலில் 109 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. பிறஇடங்களில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்):
சிவகிரி- 53, கருப்பாநதி- 24, அடவிநயினார்- 20, கடனா- 11, ராம நதி- 8, குண்டாறு- 5, ஆய்க்குடி- 14, செங்கோட்டை- 1, தென்காசி- 7.2.
பாபநாசம் அணையின் நீர்மட்டம் 139.70 அடியாக இருந்தது. அணை க்கு 1,792 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 1,833 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 145.63 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 91.45 அடியாக இருந்தது. அணைக்கு 537 கனஅடி தண்ணீர் வருகிறது. 10 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.
நம்பியாறு நீர்மட்டம் 22.96 அடியாக இருந்தது. அணைக்குவரும் 250கனஅடி தண்ணீர் உபரியாக அப்படியே திறந்துவிடப்படுகிறது. கொடுமுடி யாறு நீர்மட்டம் 51 அடியாக இருந்தது. அணைக்குவரும் 350 கனஅடி தண்ணீர் உபரியாக திறந்துவிடப்படுகிறது.
தென்காசி மாவட்டத்தில் அனைத்து அணைகளும் நிரம்பும் தருவாயில் இருப்பதால் அணைகளுக்கு உள்வரத்தாக வரும் தண்ணீர் உபரியாக வெளியேற்றப்படுகிறது. தென்காசி மாவட்டத்தில் கடனா அணை நீர்மட்டம் 83 அடியாக இருந்தது. அணைக்கு வரும் 205 கனஅடி தண்ணீர் உபரியாக வெளியேற்றப்படுகிறது. ராமாநதி நீர்மட்டம் 82 அடியாக இருந்தது. அணைக்குவரும் 40 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
கருப்பாநதி நீர்மட்டம் 68.24 அடியாக இருந்தது. அணையிலிருந்து 107 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. குண்டாறு நீர்மட்டம் 36.10 அடியாக நீடிக்கிறது. அடவிநயினார் அணை நீர்மட்டம் 132 அடியாக உள்ளது. அணைக்குவரும் 75 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
அணைகளில் இருந்து பெருமளவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாலும், கனமழையால் பெருக்கெடுக்கும் காட்டாற்று வெள்ளம் காரண மாகவும் தாமிரபரணியில் வெள்ளம் கரைபுரள்கிறது. திருநெல்வேலி யில் கரையோர மண்டபங்களை மூழ்கடிக்கும் அளவுக்கு நேற்று பிற்பகலில் தாமிரபரணியில் தண்ணீர் பாய்ந்தோடியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT