Published : 18 Nov 2021 03:09 AM
Last Updated : 18 Nov 2021 03:09 AM
திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பகுதியில் பயிரிடப்பட்ட பப்பாளி மரங்கள் வெள்ள நீரில் சிக்கி அழுகியதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி பாளையங்கோட்டையில் 14 மி.மீ., திருநெல்வேலியில் 0.2 மி.மீ மழை பதிவாகியிருந்தது. பாபநாசம் அணைக்கு 2,543 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 1,898 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. நேற்றுமுன்தினம் 138.10 அடியாக இருந்த அணை நீர்மட்டம், ஓரடி உயர்ந்து 139.20 அடியாக இருந்தது.
மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 90.90 அடியாக இருந் தது. 750 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலி ருந்து 10 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. நம்பியாறு, கொடுமுடியாறு அணைகள் நிரம்பியிருக்கும் நிலையில், இந்த அணைகளுக்கு வரும் தண்ணீர் உபரியாக அப்படியே திறந்துவிடப்பட்டு வருகிறது. 50 அடி உச்சநீர்மட்டம் கொண்ட வடக்குபச்சையாறு நீர்மட்டம் 25 அடியாக இருந்தது. 52 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
பணகுடி, ரோஸ்மியாபுரம், ராஜபுதூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இப்பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் பப்பாளி சாகுபடி செய்திருந்தனர். நடவு செய்து 2 மாத பயிரான பப்பாளி தோட்டங்களில் பலத்த மழையால் பெருமளவுக்கு தண்ணீர் தேங்கியது. பூ பூத்து காய்க்கும் பருவத்தில் இருந்த பப்பாளி மரங்களில் இலைகள், பூக்கள் அழுகின. இன்னும் ஓரிரு மாதங்களில் அறுவடைக்கு தயாராகும் நிலையில் பல மரங்கள் அழுகியதால் விவசாயிகள் கவலை யடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பப்பாளி மரங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விரைவில் கணக்கெடுப்பு
இதனிடையே, ஏர்வாடியில் நடைபெற்ற மரவிதைகள் விதைப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற, திருநெல்வேலி ஆட்சியர் வே. விஷ்ணு, கூறியதாவது:ராதாபுரம், வள்ளியூர், நாங்குநேரி ஆகிய 3 வட்டாரங்க ளிலும் அதிக மழை பெய்துள்ளது. அனுமன்நதியில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் பல ஆண்டு களாக நிரம்பாத 40 குளங்கள் நிரம்பியிருக்கின்றன. பயிர்கள் சேதங்கள் குறித்து விரைவில் கணக்கெடுப்பு நடத்தப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT