Published : 16 Nov 2021 03:10 AM
Last Updated : 16 Nov 2021 03:10 AM

நடப்பு கல்வியாண்டில் - ஆன்லைன் வாயிலாக தேர்வுகளை நடத்த வேண்டும் : திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் மாணவர்கள் கோரிக்கை

திருப்பத்தூரில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா.

திருப்பத்தூர்

நடப்பு கல்வி ஆண்டில் ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப் பட்டதால், செமஸ்டர் தேர்வும் ஆன்லைனிலேயே நடத்த வேண்டும் என அரசு கல்லூரி மாணவர்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமை வகித்தார். இதில், பொதுமக்களிடம் இருந்து மனுக்களை ஆட்சியர் உட்பட அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர்.

திருப்பத்தூர் அடுத்த கெஜல் நாயக்கன்பட்டியில் இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் அக்ரகாரம் பகுதியில் இயங்கி வரும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்ப தாவது:

நடப்பு கல்வியாண்டு முழு வதும் ஆன்லைன் மூலமாகவே பாடம் நடத்தப்பட்ட நிலையில், செமஸ்டர் தேர்வு எழுத்து தேர்வாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் கிராமப்பகுதிகளில் உள்ள மாணவர்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட பாடங்களை போதிய சிக்னல் கிடைக்காததால் கல்வி கற்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், எழுத்து தேர்வு நேரடியாக நடத்தினால் அது மாணவர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்ப தால் ஆன்லைன் முறையிலேயே தேர்வுகளை நடத்த வேண்டும். அல்லது, நேரடி தேர்வு நடத்த எங்களுக்கு குறைந்த பட்சம் 3 மாதங்கள் காலஅவகாசம் அளிக்க வேண்டும்’’ என மனுவில் தெரிவித்திருந்தனர்.

திருப்பத்தூர் அடுத்த புதுக்கோட்டை கல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வள்ளியம்மாள்(73) என்பவர் கொடுத்த மனுவில், ‘‘எனக்கு சொந்தமான 3.30 ஏக்கர் விவசாய நிலம் மாடப்பள்ளி கிராமத்தில் உள்ளது. தற்போது பருத்தி சாகுபடி செய்துள்ளேன். அறுவடைக்கு தயாராக இருந்த நேரத்தில் பருவமழையால் சேதமடைந்துள்ளது. இதேபோல, பல விவசாயிகள் பருவமழையால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். எனவே, பருவ மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணத்தொகையை விரைந்து வழங்க வேண்டும்’’ என குறிப்பிட்டிருந்தார்.

தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் அண்ணாமலைபட்டி கிரா மத்தைச் சேர்ந்த முருகேசன்(75) என்பவர் ஆட்சியரிடம் அளித்த மனுவில்,‘தருமபுரி மாவட்டத்தில் எனக்கு ரூ.2.50 கோடி மதிப்பில் 2 வீடுகள் உள்ளன. எனக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ள னர். தற்போது, நான் திருப்பத்தூர் மாவட்டத்தில் வசித்து வருகிறேன்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனது வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்க சென்றேன். அப்போது நான் உயிரிழந்து விட்டதாக வங்கியில் சான்றிதழ் வழங்கி எனக்கு சொந்தமான ரூ.1.50 லட்சம் பணத்தை என் மகன்கள் எடுத் துள்ளனர்.

மேலும், நான் உயிரோடு இருக்கும்போது என் இறப்பு சான்றிதழை காட்டி எனது வீட்டையும் அபகரித்துள்ளனர். எனது உயிர் பாதுகாப்பு கருதியே நான் திருப்பத்தூர் மாவட்டத்தில் மனு அளிக்க வந்துள்ளேன்’’ என அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

பின்னர், முதுகுதண்டு வடம் பாதித்த 6 மாற்றுத்திறனாளி களுக்கு 13 வகையான மருத்துவ உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா வழங்கினார்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யாபாண்டியன், திட்ட இயக்குநர் செல்வராசு, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வில்சன்ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x