Published : 15 Nov 2021 07:12 AM
Last Updated : 15 Nov 2021 07:12 AM
18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க அரசியல் கட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என நாமக்கல் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் எ. ஞானசேகரன் பேசினார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடன் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், கால்நடை பராமரிப்புத்துறை இயக்குநருமான எ.ஞானசேகரன் தலைமை வகித்துப் பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 1-ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின் தொடர்ச்சியாக இம்மாதம் 30-ம் தேதி வரை சிறப்பு சுருக்க முறை திருத்தப்பணிகள் நடைபெற உள்ளன. இப்பணியின் போது 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் தங்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.
இதுவரை பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம், முகவரி மாற்றம் தொடர்பாக மொத்தம் 6,512 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. வரும் 27, 28-ம் தேதிகளில் அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. அரசியல் கட்சியினர் தங்கள் பகுதியில் 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், இறந்த நபர்களின் பெயர்களை பட்டியலிருந்து நீக்கவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு தேர்தல் ஆணையத்திற்கு உதவ வேண்டும், என்றார்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங், மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு
ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான பணிகள் குறித்து, அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆய்வுக்கூட்டம் நடந்தது.கூட்டத்தில், ஆட்சியர் எச். கிருஷ்ணன் உண்ணி, வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் ஏ.ஞானசேகரன், மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT