Published : 13 Nov 2021 03:09 AM
Last Updated : 13 Nov 2021 03:09 AM

சாராள் தக்கர் கல்லூரிக்கு அரசுப் பேருந்து நிறுத்தம் : மாணவிகள் கடும் அவதி

திருநெல்வேலியில் தனியார் பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யும் மாணவியர்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை சாராள் தக்கர் கல்லூரிக்கு இயக்கப்பட்ட அரசுப் பேருந்து நிறுத்தப்பட்டதால் மாணவிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

திருநெல்வேலி மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவி கள் பாளையங் கோட்டையிலுள்ள சாராள் தக்கர் மகளிர் கல்லூரியில் பயின்று வருகிறார்கள். இக்கல்லூரி வழியாக திருநெல்வேலியில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தாழையூத்து பகுதியில் இருந்து தச்சநல்லூர், திருநெல்வேலி சந்திப்பு, வண்ணார்பேட்டை வழியாக இக்கல்லூரிக்கு அரசு பேருந்து இயக்கப்பட்டு வந்தது.

மகளிருக்கு அரசுப் பேருந்தில் பயணம் செய்ய இலவசம் என்று அரசு அறிவித்து பல்வேறு நகர்ப்புற பேருந்துகளிலும் மகளிர் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்பட்ட நிலையில், இப்பேருந்தை அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் முற்றிலுமாக நிறுத்திவிட்டது. இப் பேருந்தில் தினமும் 70-க்கும் மேற்பட்ட மாணவியர் கல்லூரிக்கு சென்றுவந்தனர். பேருந்து நிறுத்தப்பட்டதால் மாணவிகள் தனியார் பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள். அதுவும் இடநெருக்கடியில் ஆபத்தான நிலையில் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்யும் அவலம் நீடிக்கிறது. மேலும் தனியார் பேருந்துகளில் மாணவி களோடு மாணவர்களும் சேர்ந்து படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு செல்வதால் மாணவிகள் இன்னல்களுக்கு ஆளாகிறார்கள்.

இது, பெற்றோர் மத்தியிலும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. அரசுப் பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என்று மாணவிகளும், பெற்றோரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x