Published : 13 Nov 2021 03:09 AM
Last Updated : 13 Nov 2021 03:09 AM

கலவகுண்டா அணை முழுமையாக நிரம்பியதால் - பொன்னை ஆற்றில் இருந்து : 15,000 கனஅடிக்கு தண்ணீர் திறப்பு : வெள்ள அபாய எச்சரிக்கை

வேலூர் மாவட்டம் பொன்னை அணைக்கட்டு நிரம்பி ஆற்றில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுவதை நேற்று பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன். அருகில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வக்குமார் உள்ளிட்டோர்.படம்: வி.எம்.மணிநாதன்.

வேலூர்

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட் டத்தில் உள்ள கலவகுண்டா அணையில் இருந்து 15 ஆயிரம் கனஅடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் பொன்னை ஆற்றில் கரையோர மக்களுக்கு வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்கள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வடதமிழகத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரண மாக கடந்த இரண்டு நாட்களாக தமிழக-ஆந்திர எல்லை மாவட்டங்களான வேலூர், ராணிப் பேட்டையில் பரவலான கனமழை பதிவாகியுள்ளது. தொடர் மழையின் காரணமாக, ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் கலவகுண்டா அணை நிரம்பிய தால் நேற்று பகல் 1 மணியளவில் சுமார் 11,555 ஆயிரம் கனஅடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அடுத்த 5 மணி நேரத்தில் இதன் அளவு 15 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்படும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, பொன்னை ஆற்றின் கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் குமாரவேல் பாண்டியன் (வேலூர்), பாஸ்கர பாண்டியன் (ராணிப்பேட்டை) ஆகியோர் வெள்ள அபாய எச் சரிக்கை விடுத்தனர். பொன்னை ஆற்றை கடக்கும் வேலூர் மாவட் டத்தில் கே.என்.பாளையம், பொன்னை, பரமசாத்து, கீரை சாத்து, மாதண்டகுப்பம், கொல்லப் பல்லி, மேல்பாடி, வெப்பாளை கிராமங்களிலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் மருதம்பாக்கம், ஏகாம்பரநல்லூர், கொண்டகுப்பம், சீக்கராஜபுரம், நரசிங்கபுரம், லாலாப்பேட்டை, தெங்கால், காரை, திருமலைச்சேரி, பூண்டி, குடிமல்லூர், சாத்தம்பாக்கம், விஷாரம், ஆற்காடு, சக்கரமல்லூர், புதுப்பாடி ஆகிய பகுதிகளில் வருவாய்த்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர்.

பொன்னை அணைக்கட்டு, மேல்பாடி, பொன்னையாற்று பாலத்தில் வெள்ளத்தின் அளவை மாவட்ட ஆட்சியர் அதிகாரி களுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, ஆற்றின் கரையோர பகுதிகளில் மேல்பாடி-பொன்னை பாலம் உள்ளிட்ட இடங்களில் காவலர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தவும், தாழ்வானப் பகுதிகளில் வசிப் பவர்கள் முகாம்களில் தங்க வைக்கவும் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். இரவு நேரத்தில் யாரும் பொன்னை ஆற்றின் நீர்நிலை பகுதிகளை கடக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x