Published : 12 Nov 2021 03:17 AM
Last Updated : 12 Nov 2021 03:17 AM
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் தீயணைப்பு மீட்புப்பணித் துறை சார்பில் பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டியபாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான செயல்விளக்க விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டியபாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான செயல்விளக்க பயிற்சி தருமபுரி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பேரிடர் மேலாண்மை துறை மற்றும் தீயணைப்பு மீட்புப்பணித் துறை சார்பில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, ஆட்சியர் திவ்யதர்சினி முன்னிலை வகித்தார். மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர் செந்தில்குமார், மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் ஆனந்த் ஆகியோர் மேற்பார்வையில் தீயணைப்பு படை வீரர்கள் செயல்விளக்க பயிற்சி அளித்தனர்.
இதில், எதிர்பாராத விதமாக ஏற்படும் தீ விபத்துக்களின்போது தீயை கட்டுப்படுத்தும் முறை, கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் முறை தொடர்பான செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. மீட்புப் பணிக்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்கள், அதிநவீன கருவிகள், நீரில் மூழ்கியவர்களை பாதுகாப்பாக மீட்க கவச உடைகள் அணிந்து மீட்பு பணி உள்ளிட்டவைகள் தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டன.
மேலும், பேரிடர் காலங்களில் தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 24 மணி நேரமும் செயல்படும் பேரிடர் கால அவசர சிறப்பு தொலைபேசி எண் 112-ல் தொடர்புகொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திம்மாபுரம் ஏரி
கிருஷ்ணகிரி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை சார்பில் திம்மாபுரம் ஏரியில் செயல்விளக்க பயிற்சி நடைபெற்றது. நீரில் மூழ்கியவர்களை எவ்வாறு பாதுகாப்பாக மீட்பது என்பது தொடர்பாக தீயணைப்பு நிலைய போக்குவரத்து அலுவலர் வெங்கடாசலம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்க பயிற்சி அளித்தனர்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT