Published : 10 Nov 2021 03:07 AM
Last Updated : 10 Nov 2021 03:07 AM
வடகிழக்குப் பருவமழையினால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக பொதுமக்கள் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் மழை பாதிப்புகளை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாதிப்புகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக வட்டாரம், கோட்டங்கள் வாரியாக பொறுப்பு அலுவலர்களை நியமித்து ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார். மேலும், மழை பாதிப்புகள் தொடர்பாக பொதுமக்கள் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வடகிழக்குப் பருவமழையினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் மாவட்டத்தின் பொதுவான சட்டம் ஒழுங்கு நிகழ்வுகள் விபத்துக்கள், எதிர்பாராத சம்பவங்கள் தொடர்பாக சேலம் மாவட்ட பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறைக்கு வரும் தொலைபேசி அழைப்புகளின் பதிவுகளை ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஆகியோரிடம் தெரிவிக்க ஆட்சியர் அலுவலகத்தில் முதல் தளம் அறை எண்.120-ல் மாவட்ட கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு வட்டங்கள், கோட்டங்கள் வாரியாக பருவமழை பாதிப்புகளை கண்டறிந்து, உடனடியாக அதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு, சுழற்சி முறையில் துணை வட்டாட்சியர்கள் நிலையில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மழையால் ஏற்படும் பாதிப்புகளை பொதுமக்கள் மாவட்ட பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையை 1077 என்ற கட்டணம் இல்லாத தொலைபேசி எண் மற்றும் 0427- 2452202, 0427-2450498, 0427-2417341 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT