Published : 10 Nov 2021 03:08 AM
Last Updated : 10 Nov 2021 03:08 AM
``தமிழகத்தில் அனைத்து மாவட்டங் களிலும் சிறுபான்மையினர் நல அலுவலர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று, தமிழ்நாடு மாநில சிறுபான்மை யினர் ஆணைய தலைவர் எஸ். பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு சிறுபான்மை யினருக்கு செயல்படுத்திவரும் வளர்ச்சி திட்டங்கள் குறித்த கலந்தாய்வு கூட்டம், திருநெல் வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் முதற்கட்டமாக இந்த ஆண்டு 5 மாவட்டங்களில் சிறுபான்மையினர் நல அலுவலர் கள் புதிதாக நியமிக்கப்பட்டு, அதற்காக ஆண்டுக்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரும் காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் 5 அலுவலர்களை நியமித்து, 5 ஆண்டுக்குள் அனைத்து மாவட்டங்களிலும் சிறுபான்மையினர் நல அலுவலர் களை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தமிழகத்தில் உள்ள பள்ளி வாசல்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ் இமாம்கள், அரபி ஆசிரியர்கள், ஆசிரியைகள், மோதினார்கள், பிலால்கள் மற்றும் இதர பணியாளர்கள், தர்காக்கள், அடக்கஸ்தலங்கள், தைக்காக்கள், ஆஷூர்கானாக்கள் மற்றும் முஸ்லிம் அனாதை இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரிபவர்கள், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம் மூலம் நலத்திட்ட உதவிகள் பெறலாம். உலமாக்கள் நல வாரியத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் 628 உறுப்பினர்கள் உள்ளனர். தற்போது 35 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், 2020-2021-ம் ஆண்டில் 30,812 மாணவ, மாணவியருக்கு ரூ. 6.86 கோடி வழங்கப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டில் 24,503 மாணவ, மாணவியர் கல்வி உதவிதொகை க்காக விண்ணப்பித்துள்ளார்கள்.
ராணுவ படைப் பணியின்போது மரணமடைந்தவர்களின் வாரிசுதாரர்கள் மற்றும் வருவாய்த் துறையில் பணியின்போது காலமான பணியாளர்களின் வாரிசு தாரர்கள் என 10 பேருக்கு கருணை அடிப் படையில் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் 50 முஸ்லீம் மகளிருக்கு ரூ.5,25,000 மதிப்பில் மாவு அரைக்கும் இயந்திரங்களும், கிறித்தவ மகளிர் உதவும் சங்கம் மூலம் கிறித்தவ மகளிருக்கு தலா ஒருவருக்கு ரூ.6,000 வீதம் 257 நபர்களுக்கு ரூ.15.42 லட்சம் மதிப்பில் உதவித் தொகையும் வழங்கப்பட்டது.
தமிழக சட்டப் பேரவை தலைவர் மு. அப்பாவு, சிறுபான்மையினர் ஆணைய உறுப் பினர் செயலர் துரை ரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு, எம்.பி. சா.ஞானதிரவியம், எம்எல்ஏ மு.அப்துல் வகாப், மாவட்ட ஊராட்சி தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள், சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் கு.உஷா, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் அழகிரி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதிவேந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT