Published : 08 Nov 2021 01:10 AM
Last Updated : 08 Nov 2021 01:10 AM

அரும்பாவூர், அரசலூர் ஏரிகளில் ஆய்வு :

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் வட கிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதை முன்னிட்டு ஆட்சியர் ப. வெங்கடபிரியா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் ச.மணி ஆகியோர் நேற்று அரசலூர் மற்றும் அரும்பாவூர் ஏரிகளில் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்தது;

பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் நீர் நிலைகளுக்கு அதிகளவில் தண்ணீர் வரத்து உள்ளது. இந்நிலையில், தரைப்பாலங்கள், நீர்வரத்து கால்வாய்களில் மழைநீருடன் குப்பை, செடிகள், மரத்துண்டுகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்றவை கலந்து வருவதால் தண்ணீர் செல்லும் பாதைகளில் அடைப்பு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே, அவற்றை அகற்ற வேண்டும். நீர்வரத்துக் கால்வாய்களில் உள்ள கருவேல மரங்கள், மண்திட்டுகள், போன்றவற்றை உடனடியாக அகற்றி நீர்வழிப்பாதையை சரி செய்து தங்குதடையின்றி தண்ணீர் செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் சேதங்கள் குறித்து 04328 1077, 1800 425 4556 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களிலும் மற்றும் 9445000458, 7402607785, 9384056223 ஆகிய செல்போன் எண்களிலும் 24 மணிநேரமும் தொடர்பு கொண்டு மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கலாம். பேரிடர் ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் அவற்றை போர்க்கால அடிப்படையில் எதிர்கொள்ள அனைத்துத்துறை அலுவலர்களும் தயார் நிலையில் உள்ளனர். மக்கள் அச்சப்படத் தேவையில்லை என தெரிவித்தார்.

ஆய்வின்போது, உதவி செயற்பொறியாளர் வேல்முருகன், வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆலயமணி, வேப்பந் தட்டை வட்டாட்சியர் சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x