Published : 08 Nov 2021 01:10 AM
Last Updated : 08 Nov 2021 01:10 AM
தி.மலை மாவட்டம் சாத்தனூர் அணைக்கு விநாடிக்கு 1,540 கனஅடி நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தென்பெண்ணையாறு நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 1,300 கனஅடி நீர்வரத்து என கடந்த இரண்டு நாட்களாக இருந்தது. இந்நிலையில், விநாடிக்கு 1,540 கனஅடியாக நீர்வரத்து நேற்று அதிகரித்துள்ளது.
அணையில் உள்ள மதகுகளை மாற்றும் பணி நடைபெறுவதால், தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அணைக்கு விநாடிக்கு வரும் 1,540 கனஅடி தண்ணீரும், முழுமையாக வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டத்தை 97.45 அடியாக பொதுப் பணித்துறையினர் பராமரித்து வருகின்றனர். அணையில் 3,392 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.
இதேபோல், ஜவ்வாதுமலையில் பெய்து வரும் மழையால், மலையடிய வாரத்தை ஒட்டியுள்ள இதர மூன்று அணைகளுக்கும் நீர்வரத்து தொடர்கிறது. 59.04 அடி உயரம் உள்ள குப்பநத்தம் அணையின் நீர்மட்டம் 57.07 அடியாக பராமரிக்கப்படுகிறது. அணைக்கு விநாடிக்கு வரும் 80 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. அணையில் 647 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.
மேலும், 62.32 அடி உயரம் உள்ள செண்பகத்தோப்பு அணையின் நீர்மட்டம் 53.40 அடியாக உள்ளது. வடகிழக்கு பருவ மழை காலத்தில், மழையின் தாக்கம் தீவிரமடைந்தால், அணைக்கு நீர்வரத்து அதிகம் இருக்கும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணையில் இருந்து விநாடிக்கு 463 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
அணைக்கு விநாடிக்கு 167 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் 200 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.
அதேநேரத்தில் மிருகண்டா நதி அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. விநாடிக்கு 30 கனஅடி மட்டுமே தண்ணீர் வருகிறது. இதனால், அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படவில்லை. 22.97 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் 20.01 அடியாக உள்ளது. அணையில் 70.713 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT