Published : 08 Nov 2021 01:10 AM
Last Updated : 08 Nov 2021 01:10 AM
வேலூர்/ராணிப்பேட்டை/திருப்பத்தூர்
வட மாவட்டங்கள் மற்றும் அதையொட்டியுள்ள கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல் பட்டு, காஞ்சிபுரம் மற்றும் அதையொட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக விட்டு,விட்டு கனமழை பெய்து வருகிறது. வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு காட்பாடி, வேலூர், பொன்னை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் சோளிங்கர், அரக்கோணம், கலவை, ஆற்காடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆலங்காயம், ஆம்பூர், வடபுதுப்பட்டு பகுதிகளில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. தமிழக-ஆந்திர எல்லையில் பெய்து வரும் தொடர் மழையால் பாலாற்றில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று காலை வரை விட்டு, விட்டு மழை பெய்தது. ஏற்கெனவே கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் மாவட்டத்தில் பல இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. காட்பாடி அடுத்த அருப்புமேடு, கழிஞ்சூர், வி.ஜி.ராவ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.
சதுப்பேரி ஏரி நிரம்பி அருகேயுள்ள குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், வேலூர் கன்சால்பேட்டை, கொணவட்டம், சேண்பாக்கம், காந்திநகர் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் நேற்று சூழ்ந்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர்.
மழைநீருடன் கழிவுநீரும் கலந்து தெருக்களில் குட்டைப் போல் தேங்கி சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மாநகராட்சி ஆணையர் சங்கரன் மற்றும் அதிகாரிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று ஆய்வு செய்தனர்.
மேலும், பேரணாம்பட்டு அடுத்தரெட்டிமாங்குப்பம் ஏரி, ராஜக்கல் ஏரி ஆகியவை தொடர் மழை காரணமாக முழு கொள்ளளவை எட்டின. இதையடுத்து, ஏரியின் கரைப்பகுதியின் உறுதித் தன்மை குறித்து வருவாய்த் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கரையையொட்டி வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட் டுள்ளனர். கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பசுமாத்தூர் ஏரி நேற்று நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. வேலூர் பென்லேண்ட் மருத்துவமனை அருகே கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு மழைநீர் சாலையில் தேங்கியது. இதனை வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திகேயன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், வன்னிவேடு கிராமத்தைச் சேர்ந்த வேலு-கலைச்செல்வி மற்றும் மூர்த்தி ஆகியோரின் வீடுகள் தொடர் மழை காரணமாக நேற்று முன்தினம் இரவு இடிந்து விழுந்தன. இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
அதேபோல, வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த கோவிந்தரெட்டிபாளையம் கிராமம், மேல்வீதியைச் சேர்ந்த லட்சுமி (55) என்பவரின் வீட்டின் சுற்றுச்சுவர் நேற்று இடிந்து விழுந்தது.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியத்துக்கு உட்பட்ட புத்தேரி ஏரி தொடர் மழை காரணமாக நேற்று நிரம்பியது. அதிலிருந்து வெளியேறும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் களத்தூர்-சிறுனமல்லி சாலை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. இந்த தகவலறிந்த கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேரில் சென்று மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்தார்.
தொடர் மழை காரணமாக காவேரிப்பாக்கம் ஏரி, மகேந்திரவாடி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் மீட்புப்பணிகளில் ஈடுபட அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் 4 குழுக்களாக 100 பேர் செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு நேற்று விரைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment