Published : 06 Nov 2021 03:06 AM
Last Updated : 06 Nov 2021 03:06 AM
நூல் விலை குறைப்பு தொடர்பாக, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தொழில்துறையினர் ஒருங்கிணைந்து தமிழக முதல்வரை சந்திக்க முடிவு செய்துள்ளனர்.
நவம்பர் மாதத்துக்கான நூல் விலை கடந்த 1-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அனைத்து ரகங்களுக்கும் ரூ. 50 அதிரடியாக ஏற்றப்பட்டதால், தொழில்துறையினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். புதிய நூல் விலை (கிலோவுக்கு) விவரம்: 20-ம் நம்பர் கோம்டு ரக நுால் (வரி நீங்கலாக) ரூ. 305, 24-ம் நம்பர் ரூ. 315, 30-ம் நம்பர் நுால் ரூ. 325, 34-ம் நம்பர் ரூ. 345, 40-ம் நம்பர் ரூ. 365, 20-ம் நம்பர் செமிகோம்டு ரக நுால் ரூ. 295, 24-ம் நம்பர் ரூ. 305, 30-ம் நம்பர் ரூ.315, 34-ம் நம்பர் ரூ. 335, 40-ம் நம்பர் ரூ. 355.
நூல் விலை உயர்வு தொடர்பாக தொழில்துறையினர் மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வரும் நிலையில், தற்போது, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களும் ஒன்றிணைந்து நூல் விலை குறைப்பு தொடர்பாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.
இது தொடர்பாக, திருப்பூர் டீமா அமைப்பின் தலைவர் எம்.பி.முத்துரத்தினம் நேற்று கூறியதாவது: வரலாறு காணாத அளவில் நடப்பு மாதத்தில் நூல் விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது. கிலோவுக்கு ரூ. 50 உயர்ந்துள்ளது. இதற்கு காரணம் பஞ்சு விலை அதிகரிப்பு. ஆனால் பஞ்சு விலை ஏன் அதிகரிக்கிறது? பஞ்சை ஏற்றுமதி செய்வதால் தட்டுப்பாடு ஏற்படுகிறது. அதேபோல் வர்த்தகத்தில் ஈடுபடுபவர், பதுக்குவதால் தட்டுப்பாடு நிலவுகிறது. 3 சதவீத இறக்குமதி பஞ்சு வரி, 12 சதவீதமாக மாறியுள்ளது. மேலும் செயற்கை தட்டுப்பாடே, விலை ஏற்றத்துக்கு காரணம். இந்தியாவில் மொத்தம் 2049 நூற்பாலைகள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் 850 உள்ளன. சுமார், 45 சதவீதம் தமிழகத்தில் தான் உள்ளது. ஜவுளித் தொழில் உள்ள ஈரோடு, கரூர், திருப்பூர், சேலம், கோவை, ஈரோடு போன்ற ஊர்களுக்கு நூல் தான் முக்கிய மூலப்பொருள். ஆனால் இதன் விலை கடந்த 10 மாதத்தில் ரூ. 120 உயர்ந்துள்ளது.
ஜவுளித்தொழிலை மீட்டெடுக்க வேண்டும். இதற்காக தமிழக முதல்வரை சந்திக்க விரும்புகிறோம். மேலும் தற்போது தீபாவளியையொட்டி ஊருக்கு சென்றுள்ள தொழிலாளர்கள், வரும் 7-ம் தேதிக்கு பிறகு தான் திருப்பூர் திரும்புவார்கள். தொழிலும் அதன் பிறகு தான் வேகமெடுக்கும். ஆகவே, நூல் பயன்பாடு உள்ள அனைத்து மாவட்டங்களும் ஒன்றிணைந்து பிரச்சினைக்கு தீர்வு காணும் முனைப்போடு முதல்வரை சந்திக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT