Published : 03 Nov 2021 03:10 AM
Last Updated : 03 Nov 2021 03:10 AM
நவம்பர் மாதம் முதல் பவானிசாகர் அணையில் 105 அடிவரை நீரைத் தேக்கி வைக்க முடியும் என்பதால், பவானி ஆற்றில் உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள இரண்டரை லட்சம் ஏக்கர் பாசனப்பகுதிகளுக்கு நீர் வழங்கும் பவானிசாகர் அணை, பல்வேறு குடிநீர் திட்டங்களுக்கும் ஆதாரமாக உள்ளது. பவானிசாகர் அணையில் 105 அடிவரை (32.8 டிஎம்சி) நீரினைத் தேக்கி வைக்க முடியும். ஆனால், அணையின் பாதுகாப்பு விதிமுறைகளின்படி, அக்டோபர் மாதம் 30-ம் தேதி வரை அணையில் 102 அடி வரை மட்டுமே நீரினைத் தேக்கி வைக்க முடியும்.
ஆனால், கீழ்பவானி பாசனக் கால்வாய் உடைப்பால் பாசனத்துக்கு நீர் திறப்பு தாமதம் மற்றும் நீர்வரத்து அதிகரிப்பால் ஆகஸ்ட் மாத இறுதியிலேயே பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியது. இதனால், உபரி நீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது. ஆகஸ்ட் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் 31-ம் தேதி வரை அணையின் நீர் மட்டம் 102 அடியைத் தாண்டிய போதெல்லாம் உபரி நீர் திறக்கப்பட்டது. இதனால், ஆயக்கட்டு விவசாயிகள் வேதனையடைந்தனர்.
இந்நிலையில், நவம்பர் 1-ம் தேதி முதல் அணையில் 105 அடி வரை நீரினைத் தேக்கி வைக்க முடியும் என்பதால், கடந்த இரு நாட்களாக உபரி நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. நேற்று மாலை நிலவரப்படி, பவானிசாகர் அணையின் நீர் மட்டம் 102.04 அடியாக இருந்தது. நீர்வரத்து விநாடிக்கு 2825 கனஅடியாக இருந்தது.
அணையில் இருந்து தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனத்துக்கு 500 கனஅடியும், கீழ்பவானி பாசனத்துக்கு 2300 கனஅடி என 2800 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. உபரி நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளதால், பருவமழையால் கிடைக்கும் நீரினைத் தேக்கி வைத்து, பாசனத்துக்கு பயன்படுத்த முடியும் என விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT