Published : 03 Nov 2021 03:10 AM
Last Updated : 03 Nov 2021 03:10 AM

நெல்லையப்பர், காந்திமதி அம்மன் ஐப்பசி திருக்கல்யாண வைபவம் :

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதியம்மன் திருக்கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி அம்மன் திருக்கல்யாண வைபவம் பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

திருநெல்வேலி

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதியம்மன் திருக்கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி அம்மன் திருக்கல்யாண வைபவம் பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

திருக்கல்யாண திருவிழா கடந்த 22-ம் தேதி அம்பாள் சந்நிதியில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடை பெற்று வந்தது.

நேற்றுமுன்தினம் திருநெல்வேலி டவுன் கம்பைநதி காமாட்சி அம்மன் கோயில் அருகேயுள்ள காட்சி மண்டபத்தில் காந்திமதி அம்மனுக்கு சுவாமி நெல்லையப்பர் காட்சி அளிக்கும் வைபவம் நடைபெற்றது.

விழாவின் 10-ம் நாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கல்யாணம் விமர்சையாக நடைபெற்றது. அதிகாலையிலேயே கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும் நடைபெற்றன. பின்னர், மாப் பிள்ளை திருக்கோலத்தில் சுவாமி நெல்லையப்பர் பஞ்ச வாத்தியங் கள் முழங்க தங்கப்பல்லக்கில் சுவாமி சந்நிதியிலிருந்து ஆயிரங் கால் மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டார்.

தொடர்ந்து நெல்லையப்பருக்கு பாதபூஜை செய்யும் சடங்கு நடைபெற்றது. பின்னர், ஆயிரங்கால் மண்டபத்தில் திருமண கோலத்தில் எழுந்தருளிய காந்திமதி அம்மனும், சுவாமி நெல்லையப்பரும் மாலை மாற்றுதலும், யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட திருமாங்கல்யம் சுவாமி நெல்லையப்பர் கைகளில் வைத்து பூஜை செய்யப்பட்டு காந்திமதி அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

பின்னர், மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர்.

இதை தொடர்ந்து 3 நாட்களுக்கு ஊஞ்சல் உற்சவம், மறுவீடு, பட்டணப் பிரவேசம் ஆகிய வைபவங்கள் நடைபெறவுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x