Published : 01 Nov 2021 03:08 AM
Last Updated : 01 Nov 2021 03:08 AM
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகன் ரவி என்ற ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது தாய் ராஜேஸ்வரி நேற்று திருச்சியில் மாநில நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவிடம் மனு அளித்தார்.
திருச்சி தில்லைநகரில் உள்ள அமைச்சர் கே.என்.நேருவின் அலுவலகத்தில் அவரிடம் நேற்று மனு அளித்த ராஜேஸ்வரி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
எனது மகன் ரவி என்ற ரவிச்சந்திரன், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளார். அவரை விடுதலை செய்வதில் ஆளுநரே முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், ஆளுநர் முடிவெடுக்காமல், 2018-ல் நிறை வேற்றப்பட்ட சட்டப்பேரவை தீர்மா னத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவிட்டார்.
இதனிடையே, பரோல் வழங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றமும் தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்று உத்தரவிட்டுள்ள நிலையில், அரசும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. வயது முதிர்வு, உடல் நலக்குறைவால் நான் அவதிப்பட்டு வருவதால், எனது மகனை 3 மாத பரோலில் விடுவிக்கவும், சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் விடுதலை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சரிடம் மனு அளித்தேன். இந்த மனுவை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகவும், முதல்வரை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்வதாகவும் அமைச்சர் கே.என்.நேரு கூறினார் என தெரிவித்தார்.
அமைச்சருடனான சந்திப்பின் போது, மகஇக மாவட்டச் செயலாளர் ஜீவா, மகஇக பாடகர் கோவன், வழக்கறிஞர்கள் திருமுரு கன். முருகானந்தம், ஆதி, தாஜூதீன் மற்றும் தண்டாயுதபாணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT