Published : 31 Oct 2021 03:10 AM
Last Updated : 31 Oct 2021 03:10 AM

மதுரை கோரிப்பாளையத்தில் - தேவர் சிலைக்கு முதல்வர் உட்பட அனைத்து கட்சி தலைவர்கள் மரியாதை : பால் குடம், முளைப்பாரி எடுத்து ஊர்வலம் வந்த பெண்கள்

மதுரை

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பெண்கள் பால்குடம், முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்து தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா மற்றும் குரு பூஜை கடந்த 3 நாட்களாக நடைபெற்றது.

தேவர் ஜெயந்தி விழாவில் 3-ம் நாளான நேற்று முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட அமைச்சர்கள் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதைத் தொடர்ந்து பசும்பொன் செல்லும் வழியில் மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மருது சகோதரர்களின் சிலைகளுக்கும் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், காமராஜ், செல்லூர் ராஜு, ஆர்பி. உதயகுமார், விஜயபாஸ்கர், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏ ஆகியோர் கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அமமுக அமைப்புச் செயலாளர் இ.மகேந்திரன், ஜெயலலிதா பேரவை செயலாளர் கா.டேவிட் அண்ணாத்துரை, மகளிர் அணிச் செயலாளர் வளர்மதி ஜெபராஜ், மதுரை மாநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் மா.ஜெயபால், மாநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ஷ.ராஜலிங்கம் ஆகியோர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அவரது மகன் துரை வையாபுரி, தெற்குத் தொகுதி எம்எல்ஏ பூமிநாதன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.கே.ராஜேந்திரன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா, நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ சரவணன், மதுரை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அரசியல் கட்சிகள் மட்டுமில்லாது பல்வேறு சமூக அமைப்புகள், இளைஞர்கள் கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு மரியாதை செய்தனர். ஆயிரக்கணக்கான பெண்கள் பால்குடம், முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்து தேவர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்தனர்.

கோரிப்பாளையத்தை சுற்றிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x