Published : 30 Oct 2021 03:16 AM
Last Updated : 30 Oct 2021 03:16 AM

திருவண்ணாமலை மாவட்டத்தில் - யூரியா விலையை இரு மடங்கு உயர்த்தி விற்பனை : வியாபாரிகள் மீது விவசாயிகள் குற்றச்சாட்டு

தி.மலையில் நேற்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் பேசும் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ். படம்: இரா.தினேஷ்குமார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தனியார் உரக்கடைகளில் யூரியா மூட்டையின் விலையை இரு மடங்கு உயர்த்தி விற்பனை செய்வதை வேளாண் துறை அதிகாரிகள் தடுக்கவில்லை என குறைதீர்வு கூட்டத்தில் விவ சாயிகள் குற்றஞ்சாட்டினர்.

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் குறைதீர்வு கூட்டம், ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. ஆட்சியர் பா.முருகேஷ் தலைமை வகித்தார். கூட்டத்தில், உயிரிழந்த விவசாயி காந்திக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் திட்டங்கள் குறித்த கையேடு வெளியிடப்பட்டது. வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

விவசாயிகள் பேசும்போது, “திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுப்பணித் துறையினர் குடிமராமத்துப் பணிகளை சரியாக செய்யாததால் பல ஏரிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை. அருணா சலா சர்க்கரை ஆலையிடம் இருந்து ரூ.6 கோடி மற்றும் தரணி சர்க்கரை ஆலையிடம் இருந்து ரூ.26 கோடியை அரசாங்கம் பெற்றுத்தர வேண்டும்.

மாவட்டத்தில் யூரியா தட்டுப் பாடு காரணமாக, விவசாயம் பாதித் துள்ளது. தனியார் உரக்கடைகளில் ரூ.266-க்கு விற்க வேண்டிய ஒரு மூட்டை யூரியா, ரூ.450-க்கு விற்பனை செய்கின்றனர். இரு மடங்கு உயர்த்தி விற்கின்றனர். மேலும், ரூ.425 மதிப்பில் குருணை வாங்க கட்டாயப்படுத்தி வரு கின்றனர். விலை உயர்வை தடுக்க வேளாண் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

ஐந்து மாடுகளுக்கு ரூ.2.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்படும் மாட்டு கொட்டகையின் தகரம், தரம் இல்லாமல் உள்ளது. எனவே, ஒப்பந்தத்தை ரத்து செய்து, விவசாயிகளே நேரடியாக மாட்டு கொட்டகை அமைத்துக்கொள்ள உத்தரவிட வேண்டும். கண்ண மங்கலம் ஏரியில் கடந்த 8 ஆண்டுகளாக உள்ள ஆக்கிர மிப்புகளை அகற்றினால், 14 கிராம மக்களின் வாழ்வாதாரம் காக்கப் படும்” என்றனர்.

கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் ராஜ்குமார் பேசும்போது, “கூட்டுறவு சங் கங்களில் உரத்தட்டுப்பாடு இருப்பது உண்மைதான். தி.மலை மாவட்டத்துக்கு யூரியா மூட்டை களை தேவையை கணக்கீடு செய்து, தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு படிப்படியாக உர மூட்டைகள் பெறப்படுகின்றன. ஓரிரு வாரங்களில் தட்டுப்பாடு நீங்கிவிடும். கூட்டுறவு சங்கங்கள் மூலமாக ரூ.230 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

218 ஏரிகளில் ஆக்கிரமிப்பு

ஆட்சியர் பா.முருகேஷ் பேசும்போது, “திருவண்ணாமலை மாவட்டத்தில் நவம்பர் 3-ம் தேதி முதல் வட்டம் வாரியாக, ஒரு வாரத்துக்கு 2 கிராமங்களை தேர்வு செய்து மனுநீதி நாள் முகாம் நடத்தப்பட உள்ளது. அதிகாரிகள் மீது குறை சொல்வதை விவ சாயிகள் தவிர்த்துவிட்டு, குறைகளை மட்டும் தெரிவிக்க வேண்டும்.

பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 218 ஏரிகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. ஆக்கிர மிப்புகளை, சம்பந்தப்பட்டவர்கள் அகற்ற முன்வரவில்லை என்றால், வழக்குப் பதிவு செய்ய காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

12 குழுக்கள் அமைக்க உத்தரவு

தனியார் உரக்கடைகளில் யூரியா மூட்டைகளை அதிகளவில் விற்பனை செய்வதை தடுக்க வட்ட அளவில் உதவி இயக்குநர் தலைமையில் 12 குழுக்களை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். இதில், அதிகாரிகள், விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x