Published : 29 Oct 2021 03:11 AM
Last Updated : 29 Oct 2021 03:11 AM
பசும்பொன் தேவர் குரு பூஜை விழாவில் முதல்வர் ஸ்டாலின் நாளை பங்கேற்கிறார். இதற்காக அவர் இன்று பிற்பகல் மதுரை வருகிறார்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் 114-வது ஜெயந்தி, 59-வது குரு பூஜை விழா நேற்று தொடங்கியது. நாளை (அக்.30) வரை விழா நடக்கிறது.
தேவர் நினைவிடத்தில் சசிகலா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இன்று (அக்.,29) அஞ்சலி செலுத்துகின்றனர். இதற்காக சசிகலா நேற்றே மதுரை வந்து தனியார் ஓட்டலில் தங்கினார்.
இதனிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் தேவர் நினைவிடத்தில் நாளை (அக்.30) அஞ்சலி செலுத்துகிறார். முன்னதாக அவர் சிவகங்கை மாவட்டம், கீழடியில் அகழாய்வு இடத்தை ஆய்வு செய்வது உள்ளிட்ட ஓரிரு நிகழ்ச்சிகளில் முதல்வர் பங்கேற்கிறார்.
இதற்காக அவர் தனி விமானம் மூலம் இன்று (அக்.29) காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 12.30 மணிக்கு மதுரை வருகிறார். பின்னர் கார் மூலம் மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகைக்கு செல்கிறார். அங்கு மதிய உணவு சாப்பிடுகிறார்.
மாலையில் கீழடி சென்று அகழாய்வுப் பணிகளை ஆய்வு செய்ய உள்ளார். பின்னர் அரசு சுற்றுலா மாளிகைக்கு திரும்பும் முதல்வர், இரவு அங்கு தங்குகிறார்.
பசும்பொன்னுக்கு நாளை செல்கிறார். வழியில் காலை 8 மணிக்கு மேல் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கும், தெப்பக்குளத்தில் உள்ள மருது பாண்டியர்கள் சிலைக்கும் அவர் மாலை அணிவிக்கிறார்.
பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். பிறகு அவர் கார் மூலம் மதுரை வந்து, விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
முதல்வர் ஸ்டாலின், சசிகலா உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் தேவர் ஜெயந்தி விழாவுக்கு வருவதால் மதுரை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT