Published : 29 Oct 2021 03:13 AM
Last Updated : 29 Oct 2021 03:13 AM

நாங்குநேரி, திருக்குறுங்குடியில் ஐப்பசி மாத ஊஞ்சல் உற்சவம் :

நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் கடந்த 24-ம் தேதி தொடங்கி வரும் 2-ம் தேதி வரை ஐப்பசி மாத ஊஞ்சல் உற்சவம் நடைபெற்று வருகிறது. தினமும் காலை, மாலையில் பிரபந்த கோஷ்டி, மாலை 7 மணிக்கு ஸ்ரீவரமங்கை தாயாருடன், சுவாமி தெய்வநாயகன் ஊஞ்சலில் எழுந்தருள, ஸ்ரீமதுரகவி ராமானுஜ ஜீயர் சுவாமிகள் முன்னிலையில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.

இதுபோல், வள்ளியூர் சுந்தர பரிபூரண பெருமாள் கோயிலிலும் 10 நாள் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்று, நேற்று முன் தினம் சாற்றுமுறையுடன் நிறைவுபெற்றது.

திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் நவம்பர் 2-ம் தேதி தொடங்கி 11-ம் தேதி வரை தினமும் மாலை 5 மணிக்கு திருவாய்மொழி சேவை, 6.30 மணிக்கு தாயார்களுடன் சுவாமி ஊஞ்சல் உற்சவம் கண்டருள்கிறார்.

வைணவ ஆச்சார்யரான சுவாமி மணவாள மாமுநிகளின் 651-வது திருவவதார உற்சவம் நாங்குநேரி, திருக்குறுங்குடி மற்றும் ஆழ்வார்திருநகரி உட்பட நவதிருப்பதி கோயில்களில் நாளை (30-ம் தேதி) தொடங்குகிறது. சுவாமி அவதரித்த ஐப்பசி மூலம் நாளான நவம்பர் 8-ம் தேதி சாற்றுமுறையுடன் நிறைவுபெறுகிறது.

ஆழ்வார்கள் உற்சவம்

இதன் தொடர்ச்சியாக, ஐப்பசி பூராடம் நாளான வரும் 9-ம் தேதி சேனைமுதலியார் அவதார விழா, ஐப்பசி திருவோணம் நாளான 11-ம் தேதி பொய்கையாழ்வார் மற்றும் பிள்ளை லோகாசார்யர், ஐப்பசி அவிட்டம் நாளான 12-ம் தேதி பூதத்தாழ்வார், ஐப்பசி சதயம் நாளான 13-ம் தேதி பேயாழ்வார் ஆகியோரின் திரு அவதார உற்சவங்கள், இக்கோயில்களில் நடைபெறுகின்றன. இந்நாட்களில் அந்தந்த ஆழ்வார்கள் சாதித்த பிரபந்தங்கள் சேவிக்கப்பட்டு, சாற்றுமுறை நடைபெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x